மும்பை: கல்லீரல் அழற்சியால் பாதிக்கப்பட்ட பிரபல பாலிவுட் நடிகர் மனோஜ் குமார் சிகிச்சை பலனின்றி மரணமடைந்தார். அவரது மறைவுக்கு பிரபலங்கள், ரசிகர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். புகழ்பெற்ற நடிகர் மற்றும் திரைப்படத் தயாரிப்பாளர் மனோஜ் குமார் (87), கடந்த சில மாதங்களாக கல்லீரல் அழற்சியால் பாதிக்கப்பட்டு வந்ததால், அவரது உடல்நிலை மோசமடைந்த நிலையில் கடந்த பிப்ரவரி 21ம் தேதி மும்பையில் உள்ள கோகிலாபென் திருபாய் அம்பானி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், அவருக்கு இன்று அதிகாலை 4.03 மணியளவில் ஏற்பட்ட கடுமையான மாரடைப்பு காரணமாக திடீரென காலமானார்.
அவரது மரணத்திற்கு பாலிவுட் பிரபலங்கள், அரசியல் தலைவர்கள், ரசிகர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். தேசப்பற்றுள்ள வேடங்களில் பல படங்களில் நடித்ததற்காக அவரை ‘பாரத் குமார்’ என்று பாலிவுட்டில் அழைப்பார்கள். கடந்த 1937ம் ஆண்டு பஞ்சாபின் அம்ரித் சரசில் பிறந்த அவர், இந்தி சினிமாவில் தனக்கென ஒரு தனி இடத்தைப் பிடித்தார். தனது திரை வாழ்க்கையின் மூலம், தேசிய பெருமை மற்றும் ஒற்றுமை உணர்வை மையமாகக் கொண்ட படங்களில் நடித்து பெருமை சேர்த்தார். இந்திய சினிமாவுக்கு அவர் அளித்த பங்களிப்புகளுக்காக தேசிய திரைப்பட விருது மற்றும் பல்வேறு பிரிவுகளில் ஏழு பிலிம்பேர் விருதுகள் உட்பட பல மதிப்புமிக்க விருதுகளை அவர் பெற்றுள்ளார்.
இந்திய கலைகளுக்கு அவர் அளித்த மகத்தான பங்களிப்பை அங்கீகரிக்கும் விதமாக, ஒன்றிய அரசு அவருக்கு 1992ம் ஆண்டு பத்ம விருதை வழங்கியது. இந்திய சினிமாவில் வழங்கப்படும் மிக உயர்ந்த விருதான தாதாசாகேப் பால்கே விருதை பெற்றார். புகழ்பெற்ற நடிகரின் மறைவுக்கு திரைப்பட தயாரிப்பாளர் அசோக் பண்டிட் உள்ளிட்ட பலர் இரங்கலை தெரிவித்து உள்ளனர்.
The post கல்லீரல் அழற்சியால் பாதிக்கப்பட்ட பிரபல பாலிவுட் நடிகர் மரணம்: பிரபலங்கள், ரசிகர்கள் இரங்கல் appeared first on Dinakaran.