புதுடெல்லி: தமிழ்நாட்டின் பள்ளி கல்விக்கான நிதியை ஒன்றிய அரசு தர மறுப்பதை எதிர்த்து மக்களவையில் நடந்த காரசார விவாதத்தின் போது, ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் தமிழர்களை இழிவுபடுத்தி பேசினார். இதற்கு திமுக எம்பிக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்ததைத் தொடர்ந்து தனது வார்த்தையை திரும்பப் பெறுவதாக கூறி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பணிந்தார். இந்த விவகாரத்தால் மக்களவையில் நேற்று பெரும் கூச்சல், குழப்பம் ஏற்பட்டது. தமிழ்நாட்டில் தேசிய கல்விக் கொள்கை மூலமாக இந்தியை திணிக்கும் ஒன்றிய பாஜ அரசின் முயற்சியை திமுக அரசு கடுமையாக எதிர்த்து வருகிறது. இதனால், மும்மொழிக் கொள்கையை ஏற்க முடியாது என திட்டவட்டமாக கூறி உள்ளது. தேசிய கல்விக் கொள்கையை ஏற்காததால், பள்ளி கல்விக்கு வழங்க வேண்டிய ரூ.2,152 கோடியை தராமல் ஒன்றிய அரசு தமிழக மாணவர்களை வஞ்சித்து வருகிறது. இதுமட்டுமின்றி, மக்கள்தொகை அடிப்படையில் தொகுதி மறுசீரமைப்பு மூலம் நாடாளுமன்றத்தில் தமிழ்நாட்டின் பிரதிநிதித்துவத்தையும் குறைக்க ஒன்றிய பாஜ அரசு திட்டமிட்டுள்ளது. இப்பிரச்னைகளை திமுக எம்பிக்கள் நாடாளுமன்ற பட்ஜெட் 2ம் கட்ட கூட்டத்தொடரில் எழுப்ப வேண்டுமென முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தி இருந்தார்.
இந்த சூழலில், நாடாளுமன்ற பட்ஜெட் 2ம் கட்ட கூட்டத்தொடர் நேற்று தொடங்கியது. மக்களவை காலையில் கூடியதும், கேள்வி நேரத்தில் தேசிய கல்விக் கொள்கை விவகாரத்தை தென் சென்னை தொகுதி திமுக எம்பி தமிழச்சி தங்கபாண்டியன் எழுப்பினார். அவர் பேசுகையில், ‘‘தேசிய கல்விக் கொள்கையை ஏற்காததால் பிஎம் திட்டத்தில் தமிழ்நாட்டிற்கு வழங்கப்பட வேண்டிய ரூ.2,152 கோடி நிதியை பிற மாநிலங்களுக்கு ஒன்றிய அரசு திருப்பிவிட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இது கூட்டாட்சி தர்மம், கல்வி உரிமையை மீறும் செயல். கொள்கையை எதிர்ப்பதற்காக எந்த மாநிலமும் நிதி மறுப்பை எதிர்கொள்ளாது என்பதற்கு நாடாளுமன்றத்தில் ஒன்றிய அரசு உறுதி அளிக்குமா?’’ என கேள்வி எழுப்பினார். அதற்கு பதிலளித்து ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பேசியதாவது: ஒன்றிய, மாநில, உள்ளாட்சி அமைப்புகளால் நிர்வாகிக்கப்படும் பள்ளிகளை வலுப்படுத்தும் வகையில் ஒன்றிய அரசின் நிதி உதவியுடன் பிஎம் திட்டத்தை செயல்படுத்த திமுக தலைமையிலான தமிழ்நாடு அரசு முதலில் ஒப்புக் கொண்டது.
இதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட தயாராக இருந்தனர். என்னைப் பார்க்க வந்த பல திமுக எம்பிக்களும் இதை உறுதியாக தெரிவித்தனர். ஆனால் திடீரென அவர்கள் நிலைப்பாட்டை மாற்றிவிட்டனர். கர்நாடகா, இமாச்சல பிரதேசம் உள்ளிட்ட பாஜ அல்லாத மாநிலங்கள் கூட இந்த திட்டத்தில் இணைந்துள்ளன. முதல்வர் ஸ்டாலினும் பிஎம் திட்டத்தில் இணைய ஆரம்பத்தில் ஒப்புக் கொண்டார். ஆனால் திடீரென ஒரு சூப்பர் முதல்வர் வந்து தடுத்து விட்டார். சூப்பர் முதல்வரின் பேச்சை கேட்டு தமிழ்நாடு யு-டர்ன் செய்தது. அவர்கள் அரசியல் செய்கிறார்கள். தமிழ்நாட்டு மாணவர்களுக்கு அநீதி இழைக்கிறார்கள். மக்களை தவறாக வழிநடத்துகிறார்கள். நேர்மையற்றவர்கள், ஜனநாயகத்திற்கு விரோதமானவர்கள். இவ்வாறு அமைச்சர் தர்மேந்திர பிரதான் கூறியதோடு, தமிழக எம்பிக்களையும் ஒட்டுமொத்த தமிழர்களையும் இழிவுபடுத்தும் வகையில் சர்ச்சைக்குரிய வார்த்தையை தெரிவித்தார். இதற்கு திமுக எம்பிக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து அமைச்சர் தர்மேந்திர பிரதானுக்கு கண்டனம் தெரிவித்தனர்.
பல திமுக எம்பிக்கள், ‘‘தென்னிந்திய மாநிலங்களை பழிவாங்குவதை நிறுத்து’’ என்றும் கோஷங்களை எழுப்பினர். அவையின் மையப் பகுதியை எம்பிக்கள் முற்றுகையிட்டு கோஷமிட்டதால் அவையில் கூச்சல் குழப்பம் நிலவியது. இந்த அமளி காரணமாக பிற்பகல் 12 மணி வரை அவையை சபாநாயகர் ஓம்பிர்லா ஒத்திவைத்தார். பின்னர் அவை கூடியதும், பேசிய திமுக நாடாளுமன்ற குழு தலைவர் கனிமொழி, ‘‘தமிழக அரசை இழிவுபடுத்தும் வார்த்தையை ஒன்றிய கல்வி அமைச்சர் பயன்படுத்தி பேசியது வருத்தமளிக்கிறது. நாங்கள் ஒன்றிய கல்வி அமைச்சரை சந்தித்த போது, தேசிய கல்விக் கொள்கையை முழுமையாக ஏற்றுக் கொள்ள முடியாது, அதில் உள்ள மும்மொழிக் கொள்கையில் எங்களுக்கு உடன்பாடு இல்லை என்று தான் கூறியிருந்தோம்.
தேசிய கல்விக் கொள்கையை முழுமையாக ஏற்றுக் கொள்வதாக திமுக எப்போதும் கூறவில்லை’’ என்றார். திமுக எம்பிக்களின் கடுமையான எதிர்ப்பால் பணிந்த ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான், ‘‘தமிழக அரசையும், தமிழக எம்பிக்களையும், தமிழர்களையும் இழிவுபடுத்தும் வார்த்தையை நான் பயன்படுத்தியதாக எனது சகோதரியும், மூத்த எம்பியுமான கனிமொழி கூறியிருக்கிறார். எனவே எனது அந்த வார்த்தையை நான் வாபஸ் பெறுகிறேன். அதை அவைக்குறிப்பில் சேர்க்க வேண்டாம்’’ என கேட்டுக் கொண்டார். இதைத் தொடர்ந்து அந்த வார்த்தை அவைக்குறிப்பில் இருந்து நீக்கப்படும் என சபாநாயகர் ஓம்பிர்லா தெரிவித்தார். தேசிய கல்விக் கொள்கை விவகாரத்தில் திமுக எம்பிக்களுக்கும், ஒன்றிய அமைச்சருக்கும் இடையே காரசார வாதம் நடந்த சம்பவம் மக்களவையில் பெரும் பரபர ப்பை ஏற்படுத்தியது.
The post கல்வி நிதி தர மறுப்பதை எதிர்த்து மக்களவையில் காரசார விவாதம்: தமிழர்களை இழிவுபடுத்திய ஒன்றிய அமைச்சர்: திமுக எம்பிக்களின் கடும் எதிர்ப்புக்கு பணிந்தார் தர்மேந்திர பிரதான் appeared first on Dinakaran.