புதுடெல்லி: கள்ளக்குறிச்சி விஷச்சாராய வழக்கை சிபிஐ-க்கு மாற்றியதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு மேல்முறையீடு செய்துள்ளது.
கள்ளக்குறிச்சி கருணாபுரம் பகுதியில் கடந்த ஜூன் மாதம் விஷச்சாராயம் குடித்து 68 பேர் பலியானார்கள். இந்த சம்பவம் குறித்து சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில், வழக்கை சிபிஐக்கு மாற்ற வேண்டும் என பல்வேறு தரப்பினர் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டன.
இந்த வழக்குகளை விசாரித்த நீதிபதிகள் கிருஷ்ணகுமார் மற்றும் பாலாஜி ஆகியோர் அடங்கிய அமர்வு, கள்ளக்குறிச்சி விஷ சாராய மரணம் தொடர்பான வழக்குகளை சிபிஐ விசாரணைக்கு மாற்றி கடந்த மாதம் (நவம்பர்) 20-ந்தேதி உத்தரவிட்டது. இந்த நிலையில், சென்னை உயர்நீதிமன்றத்தின் இந்த உத்தரவை எதிர்த்தும், ஐகோர்ட் உத்தரவுக்கு இடைக்கால தடை விதிக்க கோரியும் உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு சார்பில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
அந்த மேல்முறையீட்டு மனுவில்;
விஷ சாராய வழக்கை சிபிஐ வசம் ஒப்படைத்தால் அதன் விசாரணை முடிய கால தாமதம் ஆகும். தமிழ்நாடு காவல்துறையே விசாரணையை தொடர்ந்து நடத்த அனுமதிக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.
இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த விவகாரம் தொடர்பாக அதிமுக, பாமக, பாஜக சார்பில் உச்சநீதிமன்றத்தில் கேவியட் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
The post கள்ளக்குறிச்சி விஷச்சாராய வழக்கை சிபிஐ-க்கு மாற்றியதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு மேல்முறையீடு..! appeared first on Dinakaran.