புதுடெல்லி ‘கடின கேள்விகளுக்கு பதிலளிக்க வேண்டியதால் கவனத்தை திசை திருப்ப உலக நாடுகளுக்கு எம்பிக்கள் குழுவை பிரதமர் மோடி அனுப்புகிறார்’ என காங்கிரஸ் விமர்சித்துள்ளது. முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தியின் நினைவு தினத்தையொட்டி காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் தனது அஞ்சலி செலுத்தும் பதிவில் கூறியிருப்பதாவது: 1950களில் இருந்து பல்வேறு அரசியல் கட்சிகளைச் சேர்ந்த எம்பிக்கள் ஒவ்வொரு அக்டோபர்-நவம்பர் மாதமும் நியூயார்க்கில் உள்ள ஐநாவிற்கு பிரதிநிதிகளாக அனுப்பப்பட்டு வந்தனர். இந்த மரபை பிரதமர் மோடி 2014ல் இருந்து நிறுத்திவிட்டார். ஆனால் இப்போது அவர் மிகவும் விரக்தியில் இருப்பதாலும், உலகளவில் அவரது பிம்பம் உடைந்துவிட்டதாலும், கடினமான கேள்விகளுக்கு பதிலளிக்க வேண்டியிருப்பதாலும் கவனத்தை திசைதிருப்ப உலக நாடுகளுக்கு எம்பிக்கள் குழுவை அனுப்பி வைக்கிறார்.
ராஜீவ்காந்தியிடம் பிரதமர் மோடியிடம் இல்லாத மனிதநேயம், நன்னடத்தை, கண்ணியம் ஆகிய குணங்கள் இருந்ததாக அவரது அரசியல் எதிராளியான அடல் பிகாரி வாஜ்பாயே கூறியிருக்கிறார். இவ்வாறு கூறிய ஜெய்ராம் ரமேஷ், ஐநா குழுவில் தன்னை ராஜீவ்காந்தி சேர்த்ததாகவும், அதன் மூலம் நியூயார்க்கில் சிறுநீரக கோளாறுக்கு சிகிச்சை பெற்றதாகவும் அதற்கான செலவுகளை அரசு கவனித்து தன் உயிரை காப்பாற்றியதாகவும் வாஜ்பாய் பேசிய வீடியோவை பகிர்ந்துள்ளார்.
* பாக்.கில் பிரபலமாக காங்கிரசில் போட்டி
ஜெய்ராம் ரமேஷ் பேச்சுக்கு பதிலளித்த பாஜ தேசிய செய்தித் தொடர்பாளரும் மாநிலங்களவை எம்பியுமான சுதன்ஷு திரிவேதி, ‘‘பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாதத்திற்கு எதிரான இந்தியாவின் வலுவான நிலைப்பாட்டை தெரிவிக்க ஒன்றிய அரசு மேற்கொண்ட முயற்சியை காங்கிரஸ் தலைவர் குறைத்து மதிப்பிடுகின்றனர். நமது ராணுவ நடவடிக்கைக்கு ஆதாரத்தைக் கேட்க முடியாததால் காங்கிரஸ் விரக்தியில் இதுபோன்ற அறிக்கையை வெளியிட வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. தேசியவாதம் காங்கிரசின் கண்களில் இருந்து முற்றிலும் மறைந்துவிட்டது. கார்கே, ராகுல் காந்தி, ஜெய்ராம் ரமேஷ் ஆகியோரின் கருத்துக்களில் இருந்து, பாகிஸ்தானில் பிரபலமடைவதற்கான போட்டியில் அவர்கள் ஒருவரையொருவர் விஞ்ச முயற்சிக்கிறார்கள் என்பது தெரிகிறது’’ என்றார்.
* அமித்ஷா தோல்வி
காங்கிரசின் ஓய்வு பெற்ற ராணுவ வீரர்கள் பிரிவு தலைவர் ரோகித் சவுத்ரி நேற்று அளித்த பேட்டியில், ‘‘ஆபரேஷன் சிந்தூர் முழுக்க முழுக்க ராணுவத்தின் வெற்றி நடவடிக்கை. அதே சமயம் பஹல்காம் விவகாரத்தில் மோடிக்கு அரசியல் தோல்வி கிடைத்துள்ளது. உளவுத்துறை, பாதுகாப்பில் தோல்வி அடைந்துள்ளனர். அதற்கு உள்துறை அமைச்சர் அமித்ஷாதான் பொறுப்பேற்க வேண்டும். தீவிரவாதிகள் சுற்றுலா பயணிகள் ஒவ்வொருவரையாக கொலை செய்து விட்டு பதற்றமின்றி தப்பிச் சென்றுள்ளனர். இது எப்போதும் நடக்காத ஒன்று. எனவே ஒன்றிய உள்துறை அமைச்சர் முழு தோல்வி அடைந்துள்ளார்’’ என்றார்.
The post கவனத்தை திசைதிருப்பவே வெளிநாடுகளுக்கு எம்பிக்கள் குழுவை மோடி அனுப்புகிறார்: காங். விமர்சனம் appeared first on Dinakaran.