புதுடெல்லி: காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரும், திருவனந்தபுரம் எம்பியுமான சசிதரூர் நேற்று முன்தினம் ஒரு நிகழ்ச்சியில் ஒன்றிய அமைச்சர் பியூஸ் கோயல் மற்றும் இங்கிலாந்தின் வணிக மற்றும் வர்த்தக துறை அமைச்சர் ஜோனாதன் ரெனால்ட்ஸ் ஆகியோரை சந்தித்து பேசினார். அப்போது அவர்களுடன் சசிதரூர் எடுத்துக் கொண்ட செல்பி படத்தை தனது சமூக ஊடகத்தில் பதிவிட்டுள்ளார்.
சசிதரூரின் செல்பி புகைப்படம் வைரலாகி உள்ளது. சமீபத்தில் கேரளாவில் முதலீட்டு சூழலை மேம்படுத்தியதற்காக முதல்வர் பினராய் விஜயன் அரசை சசிதரூர் பாராட்டி எழுதிய கட்டுரை ஆங்கில செய்தித்தாளில் வெளியாகி கடும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதனால் கேரள காங்கிரஸ் தலைவர்கள் சசிதரூரிடம் இருந்து ஒதுக்கி நிற்கின்றனர். ஆனால் இடதுசாரி அரசை பாராட்டவில்லை என்றும், மாநிலத்தில் ஸ்டார்ட் அப் துறையின் முன்னேற்றத்தை பாராட்டியதாகவும் சசிதரூர் விளக்கம் அளித்தார்.
இந்த சூழலில் ஒன்றிய அமைச்சருடன் சசிதரூர் செல்பி புகைப்படத்தை வெளியிட்டிருப்பது பல்வேறு யூகங்களை ஏற்படுத்தி உள்ளது. கட்சித் தலைவர் தேர்தலில் காந்தி குடும்ப வேட்பாளர் மல்லிகார்ஜூன கார்கேவை எதிர்த்து போட்டியிட்டதால் சசிதரூர் கட்சியிலிருந்து ஒதுக்கப்படுவதாக பாஜ ஐடி பிரிவு தலைவர் அமித் மால்வியா கூறி உள்ளார். முன்னதாக, அமெரிக்க அதிபர் டிரம்புடனான சந்திப்புக்கு முன்பாக பிரதமர் மோடியை சசிதரூர் பாராட்டி பேசியது சர்ச்சையானது குறிப்பிடத்தக்கது.
The post காங்கிரசில் பரபரப்பு ஒன்றிய அமைச்சருடன் சசிதரூர் திடீர் செல்பி: கட்சி தாவ திட்டமா? appeared first on Dinakaran.