மும்பை: நடிகையின் திடீர் மரணத்தை தொடர்ந்து அவரது கணவரான நடிகர் பராக் தியாகி கண்ணீருடன் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். ‘காண்டா லகா’ என்ற ஒரே பாடல் மூலம் நாடு முழுவதும் பிரபலமான நடிகை ஷெபாலி ஜரிவாலா, கடந்த ஜூன் 27ம் தேதி தனது 42வது வயதில் திடீரென காலமானார். அவரது மறைவு, திரையுலகினர் மற்றும் ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியது. ஷெபாலியின் துடிப்பான நடனமும், வசீகரமான தோற்றமும் அவரை ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடிக்க வைத்தது. தற்போது, ஷெபாலியின் கணவரும், நடிகருமான பராக் தியாகி, தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் உருக்கமான வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், ஷெபாலியுடன் அவர் மற்றும் அவர்களது செல்ல நாய் ‘சிம்பா’ ஆகியோர் இருந்த மகிழ்ச்சியான தருணங்களின் புகைப்படங்கள் இடம்பெற்றுள்ளன.
ஷெபாலியின் மறைவிற்குப் பிறகு, தானும் சிம்பாவும் அந்தத் துயரத்திலிருந்து எப்படி மீண்டு வருகிறோம் என்பதை விளக்கும் வகையில் இந்த வீடியோவை பகிர்ந்துள்ளதாக அவர் கூறியுள்ளார். மேலும், ‘என்னால் அவரை (ஷெபாலி ஜரிவாலா) என் கைகளில் ஏந்த முடியாமல் இருக்கலாம். ஆனால் அவர் என் இதயத்தில், என் கண்களில், என் ஒவ்வொரு சுவாசத்திலும் வாழ்ந்து கொண்டிருக்கிறார். எனது தேவதை உடனான நினைவுகளின் மூலமே இந்தத் துயரத்தைச் சமாளிக்கிறேன்’ என்று குறிப்பிட்டுள்ளார். இந்த வீடியோவின் பின்னணியில், ‘தும் ஹோ’ என்ற பிரபலமான இந்திப் பாடலையும் அவர் இணைத்துள்ளார். இந்த பதிவு காண்போரை கண்கலங்க வைத்துள்ளது.
The post ‘காண்டா லகா’ நாயகியின் திடீர் மரணம்: துயரத்தில் தவிக்கும் கணவரின் கண்ணீர் பதிவு appeared first on Dinakaran.