நாகை அருகே உள்ள காமேஸ்வரம் கடற்கரைக்கு ‘நீலக்கொடி அங்கீகாரம்’ என்ற சர்வதேச சான்றிதழ் விரைவில் கிடைக்கவுள்ளது. இதையடுத்து அங்கு மேம்பாட்டு பணிகள் நடைபெற்று வருகின்றன.
உலகின் பல்வேறு கடற்கரைகளில் மேற்கொள்ளப்பட்டுள்ள திடக்கழிவு மேலாண்மை, கடற்கரை தூய்மை, அங்கு வரும் சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு அம்சங்களை மதிப்பீடு செய்து டென்மார்க் நாட்டைச் சேர்ந்த சுற்றுச்சூழல் கல்விக்கான அறக்கட்டளை எனும் அமைப்பு சிறந்த கடற்கரைக்கு ‘நீலக்கொடி சான்றிதழ்’ வழங்கி வருகிறது. இந்த சான்றிதழ் கிடைப்பதன் மூலம், கடற்கரைகளுக்கு சர்வதேச அங்கீகாரம் கிடைப்பதுடன், சுற்றுலா பயணிகள் வருகையும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.