*நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்குமா?
ஆறுமுகநேரி : காயல்பட்டினம் மெயின் பஜாரில் கடைகளுக்கு சரக்குகள் கொண்டுவரும் வாகனங்கள் சாலையின் மத்தியிலேயே நிறுத்தி பொருட்களை மாற்றுவதால் போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படுகிறது. இவ்விஷயத்தில் நகராட்சி நிர்வாகம் பாரபட்சமின்றி நடவடிக்கை எடுக்க முன்வருமா? என்ற எதிர்பார்ப்புடன் மக்கள் உள்ளனர்.
தூத்துக்குடியில் இருந்து காயல்பட்டினம் வழியாக திருச்செந்தூருக்கு செல்லும் வாகனங்கள் எல்கே லெப்பை தம்பி சாலையை பயன்படுத்துகின்றன.
இதேபோல் திருச்செந்தூரில் இருந்து தூத்துக்குடி செல்லும் வாகனங்கள் காயல்பட்டினம் கூலக்கடை பஜாரை பயன்படுத்தி வருகின்றன. காயல்பட்டினத்தில் உள்ள இந்த இரு வழித்தடங்களிலும் அதிகளவில் கடைகள், வர்த்தக நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன.
இருப்பினும் இந்த இரு வழிப்பாதைகளும் மிகக் குறுகலாகவே காணப்படுகின்றன.இந்நிலையில் காயல்பட்டினம் கூலக்கடை பஜாரில் செயல்படும் கடைகளுக்கு கொண்டுவரப்படும் பொருட்களை போக்குவரத்துக்கு இடையூறாக சரக்கு வாகனங்களை நிறுத்துவதோடு சாலையின் நடுவிலேயே பொருட்களை இறக்கிவைக்கும் வியாபாரிகள், கடைக்குள் கொண்டுசெல்கின்றன.
இதனால் திருச்செந்தூரில் இருந்து தூத்துக்குடிக்கு காயல்பட்டினம் கூலக்கடை பஜார் வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் உள்ளிட்ட அனைத்துத் தரப்பினரும் கடும் அவதிக்கு உள்ளாகின்றனர்.
இதனிடையே இறைச்சி கறிக்கடைக்காரர்கள் சாலையை ஆக்கிரமித்து கடையின் முன்பாகவே வைத்து கறி வெட்டுவதாலும் போக்குவரத்து இடையூறு ஏற்படுகிறது. இதனால் பல்வேறு சிரமங்களுக்கு ஆளாகும் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள், கறிக்கடை உரிமையாளரிடம் வாக்குவாதத்தில் ஈடுபடும் அவலமும் தொடர்கிறது.
எனவே, இவ்விஷயத்தில் நகராட்சி நிர்வாகத்தினர் தனிக்கவனம் செலுத்துவதோடு வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்களுக்கு இடையூறு இல்லாமல் கடைகளுக்கு பொருட்கள் கொண்டு செல்ல ஆவன செய்ய வேண்டும் என்பதே அனைத்துத் தரப்பினரின் எதிர்பார்ப்பாகும்.
விதிமுறைகளை மீறி செயல்படும் கடைக்காரர்கள் மீது பாரபட்சமின்றி நடவடிக்கை மேற்கொள்ளவும் நகராட்சி நிர்வாகம் முன்வர வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
The post காயல்பட்டினம் மெயின் பஜாரில் சாலையின் நடுவிலேயே நிறுத்தப்படும் வாகனங்களால் போக்குவரத்து நெரிசல் appeared first on Dinakaran.