புதுடெல்லி: மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல், வழக்கு விசாரணை ஒன்றுக்காக கடந்தாண்டு ஜூலை மாதம் உத்தர பிரதேசம் சுல்தான்பூர் செல்லும் வழியில் காலணி தைக்கும் தொழிலாளி ராம்சேத் என்பவரை சந்தித்து அவரது தொழில் குறித்து விசாரித்தார்.
அவரது விருப்பப்படி ராம்சேத், அவரது மகன், பேரன், மகள், மருமகன் ஆகியோரை ராகுல் டெல்லி வீட்டுக்கு வரவழைத்தார். சோனியா, பிரியங்கா காந்தியும் அவர்களை சந்தித்து பேசினர். இந்த சந்திப்பு குறித்து ராம்சேத் கூறியதாவது: எனது தொழிலை விரிவுபடுத்த ராகுல் உதவியுள்ளார். எனது குடும்பத்தினருக்கு சில அறிவுரைகள் வழங்கினார். எனது மகன் டெல்லியில் ஷூக்கள் தைப்பதற்கான பயிற்சி பெறவும் அவர் ஏற்பாடு செய்துள்ளார். இதன் மூலம் ஷூக்களை ஏற்றுமதி செய்யமுடியும். ராகுல், பிரியங்கா, சோனியா காந்தி ஆகியோருக்கு நாங்கள் காலணிகளை பரிசாக அளித்து ஆசி பெற்றோம். இவ்வாறு ராம்சேத் கூறினார்.