சண்டிகர்: காலிஸ்தானி ஆதரவாளர்களால் தனக்கு கொலை மிரட்டல் விடுக்கப்படுவதாக ஒன்றிய அமைச்சர் ரவ்நீத் சிங் பிட்டு அதிர்ச்சி தரும் குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார். இவரது கருத்துகள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.
ஒன்றிய ரயில்வே துறை இணை அமைச்சரும், பாஜக மூத்த தலைவருமான ரவ்நீத் சிங் பிட்டு அளித்த பேட்டி ஒன்றில், ‘பஞ்சாபில் இருக்கும் அரசியல் தலைவர்களுக்கு காலிஸ்தானி ஆதரவாளர்களிடமிருந்து ஆபத்து நெருங்கி வருகிறது. பல தலைவர்களை கொலை செய்ய அவர்கள் திட்டமிட்டு வருகின்றனர். சமூக ஊடகங்களில் கசிந்த சில ஸ்கிரீன்ஷாட்கள் மூலம் காலிஸ்தானிகளின் திட்டம் எனக்கு தெரியவந்தது. அம்ரித்பால் சிங் தலைமையிலான ‘வாரிஸ் பஞ்சாப் தே’ அமைப்புடன் தொடர்புடைய காலிஸ்தானி ஆதரவாளர்களே இதுபோன்ற செயல்களில் ஈடுபட்டுள்ளனர். என்னுடன் சேர்த்து மற்ற சில அரசியல் தலைவர்களின் உயிருக்கும் காலிஸ்தானிகளிடமிருந்து அச்சுறுத்தல் உள்ளது.
மேலும் எங்களுடன் சேரந்து ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் மீதும் ‘வாரிஸ் பஞ்சாப் தே’ தலைவர்கள் கோபத்தில் உள்ளனர். இதற்கு காரணம், தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட அம்ரித்பால் சிங்கின் தடுப்பு காவலை மேலும் ஒரு வருடத்திற்கு நீட்டித்தது தான். எனவே இந்த அமைப்புடன் தொடர்புடைய காலிஸ்தானி தீவிரவாத சக்திகளை பஞ்சாப் அரசு உடனடியாக கைது செய்ய வேண்டும்’ என்று கூறினார்.
The post காலிஸ்தானிகளால் கொலை மிரட்டல்; ஒன்றிய பாஜக அமைச்சர் அலறல்: நடவடிக்கை எடுக்க பஞ்சாப் அரசிடம் கோரிக்கை appeared first on Dinakaran.