சென்னை: காவிரி – வைகை – குண்டாறு இணைப்புத் திட்டத்துக்கு, 2021-22-ல் ரூ.146.57 கோடி ஒதுக்கி, அதில் ரூ.116.22 செலவிடப்பட்டு 47 சதவீதம் கால்வாய் வெட்டும் பணிகள் முடிந்தது. 2022-23 மற்றும் 2023-24-ல் ரூ.176.52 கோடி ஒதுக்கி, அதில் ரூ.128.51 கோடி செலவிடப்பட்டு 86 சதவீதம் கால்வாய் வெட்டும் பணிகள் முடிந்துள்ளது. 2024-25-ல் ரூ.50.50 கோடி ஒதுக்கீடு செய்து, தற்போது வரை ரூ.33.48 கோடி செலவிடப்பட்டு 89 சதவீத கால்வாய் வெட்டும் பணிகள் முடிந்து, பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன, என்று பேரவையில் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.
தமிழக சட்டப்பேரவையில் காவிரி – வைகை – குண்டாறு இணைப்புத் திட்ட பணிகளை விரைவுபடுத்துவது தொடர்பாக அதிமுக உறுப்பினர், சி.விஜயபாஸ்கர் கவனஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தார். அதற்கு நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன் பதில் அளித்து பேசியதாவது: “2008-ம் ஆண்டு அப்போதைய முதல்வர் கருணாநிதி காவிரி – வைகை – குண்டாறு இணைப்புத் திட்டத்தை அறிவித்தார். காவிரி வெள்ள நீரை வறட்சி பாதித்த மாவட்டங்களில் பயன்படுத்துவதற்கான இந்த இணைப்புக் கால்வாய் திட்டம் மூன்று கட்டங்களாக செயல்படுத்தப்பட திட்டமிடப்பட்டுள்ளது.