* உள்துறை அமைச்சர் அமித்ஷா விரைந்தார்
ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் சுற்றுலா பயணிகள் மீது தீவிரவாதிகள் நேற்று வெறித்தனமாக தாக்குதல் நடத்தினர். இதில், 27 சுற்றுலா பயணிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். 20க்கும் மேற்பட்டோர் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த சம்பவத்தை தொடர்ந்து ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷா காஷ்மீர் வந்துள்ளார். ஜம்மு காஷ்மீரில் தற்போது தீவிரவாத தாக்குதல் சம்பவங்கள் குறைந்து சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்துள்ளதாக அண்மையில் ஒன்றிய அரசு தெரிவித்திருந்தது. இந்நிலையில் நேற்று ஜம்மு காஷ்மீரில் சுற்றுலா பயணிகளை குறி வைத்து தீவிரவாதிகள் கொலைவெறித் தாக்குதல் நடத்திய சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. தெற்கு காஷ்மீரின் அனந்த்நாக் மாவட்டம் பஹல்காம் பகுதியில் அமைந்துள்ளது பைசரன் பள்ளத்தாக்கு.
சுற்றிலும் மலை, அதில் உயரமான பைன் மரங்கள் நடுவே பசுமையான புல்வெளி என்று இயற்கை எழில் கொஞ்சும் இந்த பகுதி மினி சுவிட்சர்லாந்து என்று அழைக்கப்படுகிறது. காஷ்மீரில் அமைதி திரும்பி உள்ள நிலையில், அண்மை காலங்களில் அந்த மாநிலத்துக்கு வரும் சுற்றுலா பயணிகளில் பெரும்பகுதியினர் தவறாமல் வந்து செல்லும் இடமாக பைசரன் பள்ளத்தாக்கு மாறியுள்ளது. கோடைக்காலம் துவங்கி உள்ள நிலையில், நேற்று வழக்கம்போல் சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்திருந்தது. புல்வெளியில் குடும்பத்தோடு அமர்ந்திருந்து இயற்கை காட்சிகளை ரசித்தபடியும், குழந்தைகளோடு உற்சாகமாக ஓடி விளையாடியும் நூற்றுக்கணக்கான சுற்றுலா பயணிகள் மகிழ்ந்திருந்தனர். ஒரு சிலர் அருகே உள்ள உணவகத்தில் உணவு வாங்கி சாப்பிட்டபடி இருந்துள்ளனர். மாலை 3 மணி அளவில் பள்ளத்தாக்கின் பைன் மரக் காடுகளில் பதுங்கி இருந்த தீவிரவாதிகள் திடீரென புல்வௌியை நாலாபுறமும் சூழ்ந்தனர்.
கையில் இயந்திர துப்பாக்கிகளுடன் இருந்த தீவிரவாதிகளை பார்த்ததும் அதிர்ச்சியடைந்த சுற்றுலா பயணிகள் அலறியடித்து ஓட்டம் பிடிக்க முயற்சித்தனர். ஆனால், அவர்களை தீவிரவாதிகள் சுற்றி வளைத்தனர். கண்இமைக்கும் நேரத்தில் சுற்றுலா பயணிகளை நோக்கி சரமாரியாக துப்பாக்கியால் சுட்டனர். இதில், ஏராளமான சுற்றுலா பயணிகள் குண்டு காயங்களுடன் ரத்த வெள்ளத்தில் சாய்ந்தனர். காயம் அடைந்தவர்கள் எழுப்பிய மரண ஓலம் அந்த பகுதி முழுவதும் எதிரொலித்தது. பின்னர், தீவிரவாதிகள் தப்பி ஓடிவிட்டனர். பெயர் என்ன என்று கேட்டு குறிப்பிட்ட சிலரை தீவிரவாதிகள் சுட்டுக்கொன்றதாக உயிர் தப்பியவர்கள் கூறினார்கள். இதுபற்றிய தகவல் அறிந்து போலீசாரும், பாதுகாப்பு படையினரும் அந்த பகுதிக்கு விரைந்தனர். பைசரன் பள்ளத்தாக்கு பகுதிக்கு சாலை வசதி கிடையாது. குதிரை மூலமாகவோ, நடந்தோதான் அங்கு செல்ல முடியும்.
இதனால் சம்பவ இடத்தை பாதுகாப்பு படையினர் சென்றடைய நீண்ட நேரமானது. அதற்குள் படுகாயம் அடைந்தவர்களை அப்பகுதியினர் குதிரைகள் மூலம் அருகில் உள்ள சாலைக்கு கொண்டு வரத் துவங்கினர். பின்னர், படுகாயமடைந்தவர்கள் ஹெலிகாப்டர்கள் மூலம் மீட்கப்பட்டு அருகிலுள்ள மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர். இந்த சம்பவத்தில் இதுவரை 27 பேர் உயிரிழந்து விட்டனர். 20க்கும் மேற்பட்டோர் படுகாயங்களுடன் சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களில் பலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதால் பலி எண்ணிக்கை அதிகரிக்க கூடும் என அஞ்சப்படுகிறது. தீவிரவாதிகள் தாக்குதலையடுத்து அந்த பகுதியில் பாதுகாப்பு படையினர் மற்றும் காவல்துறையினர் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் தாக்குதல் நடத்தியவர்களை தேடும் பணி முடுக்கி விடப்பட்டுள்ளது.
இந்த சம்பவத்துக்கு முதல்வர் உமர் அப்துல்லா கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். அவர் தன் எக்ஸ் பதிவில், “தீவிரவாதிகள் தாக்குதல் சம்பவத்தை கேட்டு நம்ப முடியாத அளவுக்கு அதிர்ச்சி அடைந்துள்ளேன். கோழைத்தனமான இந்த தாக்குதலை வன்மையாக கண்டிக்கிறேன். தாக்குதல் நடத்தியவர்கள் கண்டிப்பாக கடுமையாக தண்டிக்கப்படுவார்கள் என உறுதி அளிக்கிறேன்” என தெரிவித்துள்ளார். ஜம்மு காஷ்மீர் தீவிரவாதிகள் தாக்குதல் சம்பவத்துக்கு ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷா கண்டனம் தெரிவித்துள்ளார். அவர் தன் எக்ஸ் தள பதிவில், “பஹல்காமில் சுற்றுலா பயணிகள் மீது நடத்தப்பட்ட தாக்குதலை கேட்டு வேதனை அடைந்தேன். தாக்குதல் நடத்தியவர்கள் யாரும் தப்ப முடியாது. அவர்கள் கண்டுபிடிக்கப்பட்டு கடும் நடவடிக்கை எடுக்கப்படும்” என தெரிவித்துள்ளார். மேலும் பிரதமர் மோடியின் அறிவுறுத்தலின்படி ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷா ஜம்மு காஷ்மீர் விரைந்துள்ளார்.
அமெரிக்க துணை அதிபர் ஜே.டி.வான்ஸ் இந்தியா வந்துள்ள தருணத்தில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கோடை விடுமுறை காலம் என்பதால் காஷ்மீருக்கு சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்து வந்தது. இதை தடுக்கும் நோக்கில் இந்த வெறிச்செயலில் தீவிரவாதிகள் ஈடுபட்டிருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது. மேலும், பஹல்காம் பகுதி வழியாகதான் அமர்நாத் பனிலிங்கத்தை தரிசிக்க யாத்திரையாக பக்தர்கள் செல்வார்கள். இந்த ஆண்டு அமர்நாத் யாத்திரைக்காக ஏற்பாடுகள் நடந்து வரும் நிலையில், அதை சீர்குலைக்கவும் இந்த தாக்குதலில் தீவிரவாதிகள் ஈடுபட்டிருக்கலாம் என்று போலீசார் தெரிவித்தனர்.
பஹல்காமில் நடந்த பயங்கரம்: இதயத்தை உலுக்கும் காட்சிகள்
தெற்கு காஷ்மீரில் பஹல்காமின் மலை உச்சி பகுதியில் உள்ள பைசரன் புல்வெளி பகுதியில் வழக்கமாக சுற்றுலாப்பயணிகள் கூடுவது வழக்கம். புல்வெளியை தாண்டி அந்த மலையில் அடர்ந்த பைன் மரங்கள் இடம் பெற்ற காட்டுப்பகுதி உண்டு. அங்கு இருந்து வந்த தீவிரவாத கும்பல் திடீரென பைசரன் புல்வெளியில் அமர்ந்து இருந்த சுமார் 40க்கும் மேற்பட்ட சுற்றுலாப்பயணிகளை சுற்றிவளைத்து சரமாரியாக சுட்டனர். இதனால் பலர் அலறிஅடித்து ஓடினர். அந்த இடமே போர்க்களமாக மாறியது. இந்த தாக்குதலில் உயிர் தப்பிய பெண் கூறுகையில்,’ என் கணவர் தலையில் சுடப்பட்டார். அவர் ஒரு முஸ்லீம் இல்லை என்பதற்காக சுடப்பட்டார். தாக்குதலில் மேலும் ஏழு பேர் காயமடைந்துள்ளனர். காயமடைந்தவர்களை மருத்துவமனைக்கு கொண்டு செல்ல வேண்டும். சகோதரரே, தயவுசெய்து என் கணவரைக் காப்பாற்றுங்கள்’ என்று கெஞ்சினார்.
பஹல்காம் தாக்குதல் தொடர்பான காணொலி காட்சிகள் இணையதளத்தில் வேகமாக பரவியது. துப்பாக்கியால் சுடப்பட்ட சுற்றுலா பயணிகள் தரையில் ரத்த வெள்ளத்தில் விழுந்து கிடப்பதையும், அவர்கள் அருகில் பெண்கள் மற்றும் உடன் வந்த உறவினர்கள் அழுதுகொண்டு இருக்கும் காட்சிகளும், மருத்துவமனைக்கு கொண்டு செல்ல உதவி கேட்டு கெஞ்சும் காட்சிகளும் நெஞ்சை உருக்குவதாக இருந்தது. புகழ்பெற்ற இந்த புல்வெளியில் இருந்து கீழே இறங்க நடைபாதை அல்லது குதிரைவண்டியைத்தான் பயன்படுத்த வேண்டும். எனவே உள்ளூர் மக்கள் உடனடியாக உதவிக்கு வந்து குதிரை வண்டி மூலம் காயமடைந்தவர்களை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
தாக்குதல் பற்றிய தகவலை அறிந்ததும் அதிகாரிகள் உடனடியாக ஹெலிகாப்டர்களை வரவழைத்தனர். அதற்கு முன்பு காயமடைந்த சுற்றுலாப் பயணிகளை தங்கள் தோள்களில் ஏற்றி அருகிலுள்ள வாகனம் செல்லக்கூடிய பகுதிக்கு உள்ளூர் மக்கள் கொண்டு சென்றனர். தாக்குதல் பற்றிய தகவல் பரவியதும் பஹல்காமின் சாலைகளும், தெருக்களும் வெறிச்சோடி காணப்பட்டன.
ஏராளமான சுற்றுலாப் பயணிகள் ரிசார்ட் நகரத்தை விட்டு பாதுகாப்பான இடங்களுக்குச் சென்றனர்.
தாக்குதல் நடத்தியது டிஆர்எப் தீவிரவாதிகளா?
பஹல்காம் தாக்குதலின் பின்னணியில் டிஆர்எப் எனும் தடை செய்யப்பட்ட தீவிரவாத அமைப்பு இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. தி ரெசிஸ்டன்ட் படை (டிஆர்எப்) எனும் பெயர் கொண்ட இந்த அமைப்பு, 2019 ஆகஸ்டில் காஷ்மீரில் 370வது சட்டப்பிரிவு நீக்கப்பட்ட பிறகு உருவானது. காஷ்மீர் இளைஞர்களை தீவிரவாத பாதையில் கொண்டு செல்வதை நோக்கமாக கொண்டு தொடங்கப்பட்டதே இந்த அமைப்பு. பாகிஸ்தானை தளமாக கொண்ட லஷ்கர் இ தொய்பா அமைப்பின் செயல்பாட்டை மறைப்பதற்காக அவர்களின் பினாமியாக தொடங்கப்பட்டது தான் டிஆர்எப். 2019 அக்டோபரில் நிறுவப்பட்ட டிஆர்எப்பின் உச்ச தலைவராக இருப்பவர் ஷேக் ஷஜித் குல். தலைமை ஆபரேஷன் கமாண்டராக இருப்பவர் பசித் அகமது தர். இதன் முக்கிய தலைவர்கள் அனைவருமே லஷ்கர் இ தொய்பாவுடன் தொடர்புடையவர்கள்.
2023ல் இந்த அமைப்பை தீவிரவாத அமைப்பாக அறிவித்து ஒன்றிய உள்துறை அமைச்சகம் தடை விதித்தது. இந்த அமைப்பின் முக்கிய குறி உள்ளூர் மக்கள் மற்றும் காஷ்மீரி பண்டிட்கள், வெளிமாநில தொழிலாளர்கள். கடந்த ஆண்டு கந்தர்பால் மாவட்டத்தில் கட்டுமான பகுதியில் நடந்த தாக்குதலில் ஒரு டாக்டர் மற்றும் 6 வெளிமாநில தொழிலாளர்கள் கொல்லப்பட்டனர். இதற்கு டிஆர்எப் பொறுப்பேற்றது. வெளிமாநில தொழிலாளர்கள், சுற்றுலா பயணிகள் என வெளியில் இருந்து வருபவர்கள் தங்கியிருந்து குடியிருப்புகளை வாங்கி காஷ்மீரின் அடையாளத்தையே மாற்றுகிறார்கள் என்பதும் டிஆர்எப்பின் முக்கிய குற்றச்சாட்டுகளில் ஒன்று.
இதுபோல 85,000 குடியிருப்புகள் காஷ்மீர் அல்லாதோர் வசம் சென்றுள்ளதாகவும் டிஆர்எப் உள்ளூர் இளைஞர்களை மூளைச்சலவை செய்கிறது. எனவே பஹல்காம் தாக்குதலில் டிஆர்எப் தொடர்பு இருக்க அதிக வாய்ப்புள்ளது. இத்தாக்குதலின் போது ஒவ்வொருவரின் பெயரையும், ஊரையும் கேட்ட பிறகே தீவிரவாதிகள் சுட்டுள்ளனர். 2019 காஷ்மீரில் சிறப்பு சட்டப்பிரிவு நீக்கப்பட்ட பிறகு நடந்திருக்கும் மிக பயங்கரமான தாக்குதல் இது என்பதும் குறிப்பிடத்தக்கது.
மினி-சுவிட்சர்லாந்துக்கு
பைன் மரங்களால் வந்த ஆபத்து
காஷ்மீரின் அனந்த்நாக் மாவட்டத்தில் உள்ள பஹல்காமில் இருந்து 5 கிலோமீட்டர் தொலைவில் உள்ள பைசரன் பள்ளத்தாக்கு ஒரு பிரபலமான சுற்றுலாத்தலமாகும். அந்த பகுதியின் இயற்கை அழகு காரணமாக ‘மினி-சுவிட்சர்லாந்து’ என்று அழைக்கப்படுகிறது. பைசரன் பள்ளத்தாக்கு பனி மூடிய மலைகளால் சூழப்பட்ட மற்றும் அடர்ந்த பைன் மரங்களால் சூழப்பட்ட ஒரு மலை உச்சியில் உள்ள பசுமையான புல்வெளியாகும். காஷ்மீர் பனியை அனுபவிக்க விரும்பும் பயணிகள் ஜனவரி முதல் மார்ச் வரையிலான காலகட்டத்தில் செல்வார்கள். ஏப்ரல் மற்றும் ஜூன் மாதங்களில், பசுமையான மற்றும் அழகான வானிலையைப் பார்க்க அங்கு செல்வார்கள். காஷ்மீர் துலியன் ஏரிக்கு மேலே செல்ல விரும்பும் சுற்றுலா பயணிகளுக்கு பைசரன் பள்ளத்தாக்கு பகுதி மிகவும் விருப்பமான இடமாகும். இங்குள்ள பைன் மரங்களின் அடர்த்தியாக இருக்கும். அந்த பகுதி வழியாக வந்த தீவிரவாதிகள்தான் சுற்றுலாப்பயணிகளை சுட்டுக்ெகான்று விட்டு தப்பிச்சென்று விட்டனர்.
அமர்நாத் யாத்திரைக்கு முன்பு தாக்குதல்
காஷ்மீர் பல ஆண்டுகளாக தீவிரவாதத்தால் தத்தளித்து வந்த நிலையில் சுற்றுலா பயணிகளின் வருகை தற்போது அதிகரித்துள்ளது. இந்த சூழலில் இந்த தாக்குதல் சம்பவம் நடந்துள்ளது. மேலும், 38 நாட்கள் அமர்நாத் யாத்திரை ஜூலை 3ம் தேதி தொடங்க உள்ளது. தெற்கு காஷ்மீரின் அனந்த்நாக் மாவட்டத்தில் உள்ள பாரம்பரிய 48 கிமீ பஹல்காம் பாதை மற்றும் கந்தர்பால் மாவட்டத்தில் உள்ள 14 கிமீ குறுகிய ஆனால் செங்குத்தான பால்டால் பாதை ஆகிய இரட்டை வழிகள் மூலம் நாடு முழுவதிலுமிருந்து லட்சக்கணக்கான யாத்ரீகர்கள் அமர்நாத் குகைக் கோயிலுக்குச் செல்கின்றனர். தற்போது இந்த தாக்குதல் நடந்து இருப்பது மேலும் பதற்றத்தை உருவாக்கி உள்ளது.
இதற்கு முன்பு பஹல்காமில் நடந்த தாக்குதல்
* 2000 ஆம் ஆண்டு பஹல்காமில் உள்ள அமர்நாத் தள முகாம் மீது தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 30க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். 60 பேர் காயமடைந்தனர்.
* 2001ல் ஷேஷ்நாக்கில் அமர்நாத் யாத்ரீகர்கள் மீதான தாக்குதலில் 13 பேர் கொல்லப்பட்டனர். 15 பேர் காயமடைந்தனர்
* 2002ல் பஹல்காம் பகுதியில் நடந்த மற்றொரு தாக்குதலில் 11 பேர் கொல்லப்பட்டனர்.
* 2017ஆம் ஆண்டு அமர்நாத் யாத்திரை முடிந்து திரும்பும் வழியில் 8 பேர் கொல்லப்பட்டனர்.
* 2014 மே மாதம் பஹல்காமில் உள்ள யன்னார் என்ற இடத்தில் தீவிரவாதிகள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் ராஜஸ்தானை சேர்ந்த சுற்றுலா தம்பதியினர் காயமடைந்தனர்.
மன்னிக்க முடியாத செயல்- ஜனாதிபதி முர்மு
ஜனாதிபதி திரவுபதி முர்மு வெளியிட்டுள்ள பதிவில்,’ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் சுற்றுலாப் பயணிகள் மீது நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதல் அதிர்ச்சியும் வேதனையும் அளிக்கிறது. இது ஒரு கொடூரமான மற்றும் மனிதாபிமானமற்ற செயலாகும். இது சந்தேகத்திற்கு இடமின்றி கண்டிக்கப்பட வேண்டும். அப்பாவி குடிமக்கள், சுற்றுலாப் பயணிகளைத் தாக்குவது முற்றிலும் பயங்கரமானது, மன்னிக்க முடியாதது. அன்புக்குரியவர்களை இழந்து வாடும் குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கல்கள் மற்றும் காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய எனது பிரார்த்தனைகள்’ என்று பதிவிட்டுள்ளார்.
மெகபூபா முக்தி கண்டனம்
இந்த சம்பவத்துக்கு முன்னாள் முதல்வரும், மக்கள் ஜனநாயக கட்சி தலைவருமான மெகபூபா முக்தி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். அவர் தன் எக்ஸ் பதிவில், “இந்த மிருகத்தனமான தாக்குதலை வன்மையாக கண்டிக்கிறேன். இதை சிறிதும் ஏற்று கொள்ள முடியாது. மேலும் ஜம்மு காஷ்மீரின் பாதுகாப்பு நிலை குறித்த ஒன்றிய பாஜ அரசு சொல்லி வரும் கூற்றுகள் மீது இந்த தாக்குதல் மிகப்பெரிய கேள்வியை எழுப்பி உள்ளது” என பதிவிட்டுள்ளார்.
மோடி கண்டனம்
பிரதமர் மோடி தன் எக்ஸ் தளத்தில், “பஹல்காம் தீவிரவாத தாக்குதல் சம்பவத்தை கடுமையாக கண்டிக்கிறேன். தாக்குதல் நடத்தியவர்கள் கண்டிப்பாக தண்டிக்கப்படுவார்கள். உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு இரங்கல். அவர்களின் குடும்பங்களுக்கு ஆறுதல் தெரிவித்து கொள்கிறேன். ஒன்றிய அமைச்சர் அமித் ஷாவை தொடர்பு கொண்டு தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் விரைந்து எடுக்க அறிவுறுத்தி உள்ளேன்” என தெரிவித்துள்ளார்.
காட்டுமிராண்டித்தனம்: ராகுல்காந்தி
மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல்காந்தி வெளியிட்டுள்ள பதிவில்,’ ஜம்மு காஷ்மீர் மாநிலம் பஹல்காமில் தீவிரவாதிகள் நடத்திய கோழைத்தனமான தாக்குதலில் சுற்றுலாப் பயணிகள் கொல்லப்பட்டதும், பலர் காயமடைந்துள்ள செய்தி மிகவும் கண்டனத்துக்குரியது, மனவேதனைக்குரியது. இதில் பலியானவர்களை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்வதுடன், காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன். தீவிரவாதத்திற்கு எதிராக ஒட்டுமொத்த நாடும் ஒன்றுபட்டுள்ளது.
ஜம்மு-காஷ்மீரில் நிலைமை சாதாரணமாக உள்ளது என்று வெற்றுக் கூற்றுகளை வெளியிடுவதற்குப் பதிலாக, ஒன்றிய அரசு இப்போது பொறுப்புக்கூறி உறுதியான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். இதன் மூலம் எதிர்காலத்தில் இதுபோன்ற காட்டுமிராண்டித்தனமான சம்பவங்கள் நடக்காமல், அப்பாவி இந்தியர்கள் உயிரிழக்காமல் பாதுகாக்க வேண்டும்’ என்று குறிப்பிட்டுள்ளார்.
தமிழக பயணிகளும் பாதிப்பு: முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்டனம்
சென்னை: தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் எக்ஸ்தள பதிவு: ஜம்மு – காஷ்மீர் மாநிலம் பஹல்காமில் அப்பாவி சுற்றுலாப் பயணிகளைக் குறிவைத்து, பல விலைமதிப்பற்ற உயிர்களைப் பறித்த காட்டுமிராண்டித்தனமான தீவிரவாதத் தாக்குதல் மனசாட்சியையே உலுக்குகிறது. இது கடும் கண்டனத்துக்குரியது. சொந்தங்களை இழந்து தவிக்கும் அவர்களது குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கல்கள்.
இத்தாக்குதலில் தமிழ்நாட்டைச் சேர்ந்தோரும் பாதிக்கப்பட்டிருப்பதை அறிந்து மிகவும் வேதனையடைந்தேன். உடனடியாக டெல்லியில் உள்ள தமிழ்நாடு இல்ல உள்ளுறை ஆணையரைத் தொடர்பு கொண்டு, ஜம்மு காஷ்மீர் மாநில அதிகாரிகளுடன் பேசி, பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் ஒருங்கிணைத்துத் தர அறிவுறுத்தியிருக்கிறேன்.
மனைவி, மகள் கண்முன்னே கொல்லப்பட்ட கர்நாடக தொழிலதிபர்; என்னையும் கொன்று விடு என்று மனைவி கதறல்: பிரதமர் மோடியிடம் சென்று சொல் என்று கூறிய தீவிரவாதி
காஷ்மீரில் சுற்றுலா பயணிகள் மீது நடந்த தீவிரவாதிகள் தாக்குதலில் கர்நாடக மாநிலம ஷிவமொக்காவை சேர்ந்த தொழிலதிபர் மஞ்சுநாத் அவரின் மனைவி பல்லவி கண் எதிரே சுட்டுக்கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் தொடர்பாக பல்லவி கூறுகையில் ‘சுற்றுலா பயணிகள் சுமார் 500 பேர் நின்றிருந்த போது தீவிரவாதிகள் திடீரென்று எங்களை சூழ்ந்து கொண்டு சுட்டனர். இந்த தாக்குதலில் எனது கணவர் தலையில் துப்பாக்கி குண்டு பாய்ந்து உயிரிழந்தார். இந்த தாக்குதலுக்கு பிறகு அங்கே நின்ற தீவிரவாதியிடம் என்னையும் எனது மகனையும் கொன்று விடு என கதறினேன். அப்போது, மோடியிடம் சென்று இதை சொல் என தீவிரவாதி ஒருவன் கூறினான். எனது கணவன் உடல் மலை மீது உள்ளது. நாங்கள் மூவரும் ஷிவமொக்கா வருவதற்கு உடனடியாக ஏற்பாடுகள் செய்யப்படவேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்’ என கண்ணீருடன் பல்லவி கூறினார்.
காஷ்மீர் விரைந்த கர்நாடக குழு
காஷ்மீரில் நடந்த தீவிரவாத தாக்குதல் சம்பவம் குறித்த விபரங்களை அதிகாரிகளிடம் முதல்வர் சித்தராமையா கேட்டு அறிந்தார். தலைமை செயலாளர் மற்றும் உயர் அதிகாரிகளிடம் ஆலோசனை நடத்திய முதல்வர் சித்தராமையா உடனடியாக காஷ்மீருக்கு தனி குழுவை அனுப்பி தொழிலதிபர் சடலத்துடன் அவரது குடும்பத்தை பத்திரமாக அழைத்து வர ஏற்பாடு செய்துள்ளார்.
The post காஷ்மீரில் தீவிரவாதிகள் வெறிச்செயல்; 27 சுற்றுலா பயணிகள் சுட்டுக்கொலை: 20 பேர் கவலைக்கிடம் appeared first on Dinakaran.