சென்னை: தீவிரவாத தாக்குதலில் பலியான ஆந்திர தொழில்நுட்ப பொறியாளரின் உடல் குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டது. சென்னை விமான நிலையத்தில் அவரது உடலுக்கு மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் மலரஞ்சலி செலுத்தினர். காஷ்மீர் மாநிலத்தில் ‘மினி சுவிட்சர்லாந்து’ என்று அழைக்கப்படும், பஹல்காம் பைசார் பள்ளத்தாக்கு பகுதியில், நேற்று முன்தினம் பயங்கரவாதிகள் சுற்றுலாப் பயணிகள் மீது திடீர் தாக்குதல் நடத்தினர். இதில் 26 பேர் பலியாகினர். அதில், ஒருவரான ஆந்திர மாநிலம் நெல்லூரை சேர்ந்த தகவல் தொழில்நுட்ப பொறியாளர் மதுசூதனன் ராவின் உடல், காஷ்மீரில் இருந்து ஐதராபாத் வழியாக நேற்று அதிகாலை இண்டிகோ ஏர்லைன்ஸ் பயணிகள் விமானத்தில் சென்னை விமான நிலையம் வந்தடைந்தது. அவரது உடலுக்கு மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் மலர் அஞ்சலி செலுத்தி அவரது குடும்பத்தினரிடம் ஒப்படைத்தனர்.
அப்போது, உடலை பெற்றுக்கொண்ட குடும்பத்தினர் கதறி அழுவதைக் கண்ட சக பயணிகள் துக்கம் தாளாமல் கண்ணீர் சிந்தினர். சென்னை பழைய விமான நிலையத்தில் மத்திய தொழில் பாதுகாப்பு படை சார்பில் நடந்த அஞ்சலி நிகழ்ச்சியில், தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை, பாஜ மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் ஆகியோர் இறுதி மரியாதை செலுத்தினர். பின்னர், மதுசூதனன் ராவின் உடல் அமரர் ஊர்தியில் ஏற்றப்பட்டு, சொந்த ஊரான நெல்லூருக்கு அனுப்பி வைக்கப்பட்டது. தொடர்ந்து, செய்தியாளர்களிடம் காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை கூறியதாவது: தீவிரவாதிகளின் இந்த செயல் மிகுந்த கண்டனத்துக்குரியது. ஒன்றிய அரசு தீவிரவாதிகளை வன்மையாக கண்டிக்க வேண்டும். தீவிரவாதிகளின், பொதுமக்கள் மீதான தாக்குதல் என்பது மக்களிடத்தில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.
தீவிரவாதிகளால் பெரிதும் பாதிக்கப்பட்ட இயக்கம்தான் காங்கிரஸ் பேரியக்கம். இந்திரா காந்தி, ராஜிவ் காந்தி ஆகியோர் தீவிரவாதிகளால்தான்கொல்லப்பட்டனர். தீவிரவாதிகளுக்கு மதம் இனம் என்ற அடையாளமே கிடையாது. தீவிரவாதி என்றால், அவன் பயங்கரவாதி தான். இவ்வாறு பிளவுபடுத்தும் நடவடிக்கையை, யாராக இருந்தாலும் நிறுத்த வேண்டும். பாஜ தலைவர் நயினார் நாகேந்திரன் கூறுகையில், ‘‘சுற்றுலா சென்ற பயணிகளை இந்துவா என கேட்டு சுட்டுக் கொன்றுள்ளனர். குறிப்பாக நெல்லூரை சேர்ந்த மென்பொருள் மதுசூதனன் ராவ் தாக்குதலில் உயிரிழந்துள்ளார். பிரதமர் இச்சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுத்துள்ளார். உள்துறை அமைச்சர் தாக்குதல் நடந்த இடத்திற்கு சென்று, உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தினார். பயங்கரவாத தாக்குதலில் உயிரிழந்த மதுசூதனன் ராவ் குடும்பத்திற்கு பேரிழப்பு ஏற்பட்டுள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்.
The post காஷ்மீரில் தீவிரவாத தாக்குதலில் பலியான ஆந்திரா பொறியாளர் உடல் குடும்பத்தினரிடம் ஒப்படைப்பு: சென்னை விமான நிலையத்தில் தலைவர்கள், தொழில்பாதுகாப்பு படையினர் அஞ்சலி appeared first on Dinakaran.