பெங்களூரு: குகையில் இருந்து மீட்கப்பட்ட ரஷ்ய தாயும், அவரது இரு குழந்தைகளும் தடுப்புக் காவலில் உள்ள நிலையில், அவர்களை பார்க்க வந்த தந்தைக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. மேலும், அவர் தனது குழந்தைகளை நாடு கடத்த வேண்டாம் என்று அதிகாரிகளிடம் கேட்டுக் கொண்டார். கோவாவில் வசித்து வந்த இஸ்ரேல் நாட்டைச் சேர்ந்த டிரோர் கோல்ட்ஸ்டீன் (38) என்பவருக்கும், ரஷ்யாவைச் சேர்ந்த நினா குதினா (40) என்பவருக்கும் கடந்த 2017ம் ஆண்டில் பழக்கம் ஏற்பட்டு, இருவரும் திருமணம் செய்து கொண்டனர்.
இவர்களுக்கு 6 மற்றும் 4 வயதில் இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். கடந்த சில ஆண்டுகளாக இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்ட நிலையில், நினா குதினா தனது இரண்டு குழந்தைகளையும் தன்னுடன் அழைத்துச் சென்று, கோல்ட்ஸ்டீனைப் பார்க்க அனுமதிக்காமல் இருந்து வந்துள்ளார். மேலும், குழந்தைகளுக்குப் பள்ளிக் கல்வி அளிப்பதையும் அவர் எதிர்த்துள்ளார். இதனால் கவலையடைந்த தந்தை கோல்ட்ஸ்டீன், தனது குழந்தைகளைக் காணவில்லை என கடந்த டிசம்பர் மாதம் கோவா காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். இந்நிலையில், கடந்த வாரம் கர்நாடகாவின் கோகர்ணா அருகே, ராமர் தீர்த்த மலைப் பகுதியில் உள்ள குகையில் நினா தனது இரண்டு மகள்களுடன் வசித்துவருவதை போலீசார் கண்டுபிடித்து மீட்டனர்.
தற்போது அவர்கள் தும்கூருவில் உள்ள தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர். குழந்தைகளைப் பார்க்க அவர்களின் தந்தை கோல்ட்ஸ்டீன், பெங்களூருவில் இருந்து தடுப்புக் காவல் மையத்திற்குச் சென்றார். ஆனால், அவரைப் பார்க்க நினா விரும்பவில்லை எனக் காரணம் காட்டி, அதிகாரிகள் அவருக்கு அனுமதி மறுத்துவிட்டனர். தனது உடனடி நோக்கம் குழந்தைகளைப் பார்ப்பதுதான் என்றும், அதன் பிறகு சமரசத் தீர்வு காணலாம் என்றும் தந்தை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், தனது மகள்களைத் தாயுடன் ரஷ்யாவிற்கு நாடு கடத்த வேண்டாம் என்றும், குழந்தைகளின் வளர்ப்புப் பொறுப்பைத் தன்னிடம் பகிர்ந்து அளிக்க வேண்டும் எனவும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார். இருந்தும் இவ்விவகாரத்தில் சட்ட ஆலோசனைகளை காவல்துறையினர் கேட்டுள்ளதாக தகவல்கள் ெதரிவிக்கின்றன.
The post குகையில் இருந்து மீட்கப்பட்ட ரஷ்ய தாய்; குழந்தைகளை பார்க்க வந்த தந்தைக்கு அனுமதி மறுப்பு: 2 மகள்களையும் நாடு கடத்த வேண்டாம் என்று கதறல் appeared first on Dinakaran.