காந்திநகர்: குஜராத் மாநிலத்தில் மேம்பாலம் இடிந்து விழுந்ததில் 2 லாரிகள் உள்ளிட்ட 4 வாகனங்கள் ஆற்றில் விழுந்தன. இந்த விபத்தில் 10 பேர் உயிரிழந்துள்ளனர். 6 பேர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டனர். குஜராத்தில் வடோதரா – ஆனந்த் ஆகிய நகரங்களை இணைக்கும் முக்கிய பாலம் கம்பி ரா. மஹிசாகர் ஆற்றின் மீது 43 ஆண்டுகளுக்கு முன்பு இந்த பாலம் கட்டப்பட்டது. வடோதரா மாவட்டத்தின் பத்ரா தாலுகாவில் உள்ள முச்பூரில் அமைந்துள்ள இந்த பாலம் மத்திய குஜராத்தை சவுராஷ்டிராவுடன் இணைக்கும் பாலமாகவும் இருப்பதால் 24 மணி நேரமும் போக்குவரத்து மிகுந்து காணப்படும்.
இந்நிலையில், காலை 7.30 மணியளவில் பாலத்தின் ஒரு பகுதி திடீரென இடிந்து விழுந்தது. அப்போது பாலத்தின் மீது சென்று கொண்டிருந்த 2 லாரிகள், ஒரு பிக்அப் வாகனம் உள்ளிட்ட 5 வாகனங்கள் பாலத்தின் இடிபாடுகளுடன் சேர்ந்து ஆற்றில் விழுந்தன. டேங்கர் லாரி ஒன்றும் உடைந்த பாலத்தின் நுனியில் ஆபத்தான சூழலில் சிக்கியது. இந்த விபத்தில் இடிபாடுகளில் சிக்கியும், நீரில் மூழ்கியும் 10 பேர் உயிரிழந்தனர். தகவலறிந்து வந்த வடோதரா மாவட்ட மீட்பு படையினர் உள்ளூர் மக்கள் உதவியுடன் 5 பேரை மீட்பு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆற்றில் மூழ்கிய கான்கிரீட் இடிபாடுகளில் மேலும் பலர் சிக்கி இருக்கலாம் என்று கூறப்படுவதால் உயிரிழப்பு அதிகரிக்கக்கூடும் என்று அஞ்சப்படுகிறது. ஆற்றில் விழுந்த வாகனங்களை மீட்கும் பணி நடைபெற்று வருகிறது. பாலம் இடிந்து விழுந்ததிற்கான காரணம் குறித்து குஜராத் அரசு அதிகாரிகள் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
The post குஜராத்தில் பாலம் உடைந்து வாகனங்கள் ஆற்றுக்குள் விழுந்த விபத்தில் பலி எண்ணிக்கை 10ஆக உயர்வு..!! appeared first on Dinakaran.