பாட்னா: குடும்ப சொத்து விவகாரத்தால் ஒன்றிய அமைச்சரின் பெரியம்மாவை அவரது வீட்டில் இருந்து வெளியேற்றிய கும்பலால் பீகாரில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. பீகார் மாநிலத்தை சேர்ந்த லோக் ஜனசக்தி தலைவரான மறைந்த ஒன்றிய அமைச்சர் ராம் விலாஸ் பஸ்வானுக்கு இரண்டு மனைவிகள் உள்ளனர். முதல் மனைவி ராஜ்குமாரி தேவி, இரண்டாவது மனைவி ரீனா சர்மா. முதல் மனைவியான ராஜ்குமாரி தேவி, ககாரியாவின் அலாவுலி பிளாக்கில் வசித்து வருகிறார். அந்த வீட்டை ராம் விலாஸ் பஸ்வானின் சகோதரர் பசுபதி குமார் பராஸ் மற்றும் ராமச்சந்திர பஸ்வானின் மனைவி ஆகியோர் திடீரென பூட்டினர். பின்னர் ராஜ்குமாரி தேவியை அந்த வீட்டில் இருந்து வெளியேற்றினர்.
இந்த சம்பவத்தால் வருத்தமடைந்த ராஜ்குமாரி தேவி, ‘அவர்கள் ஏற்கனவே தங்கள் சொத்துக்கள் அனைத்தையும் ஆக்கிரமித்துவிட்டதாகவும், இப்போது இருக்கும் ஒரு சொத்திலும் பங்கைக் கோருகின்றனர்’ என்று கூறினார். ஏற்கனவே ராம் விலாஸ் பஸ்வானின் மகனும், ஒன்றிய அமைச்சருமான சிராக் பஸ்வானுக்கும் (தாய் ரீனா சர்மா), சித்தப்பா பசுபதி குமார் பராஸுக்கும் இடையிலான அரசியல் மோதல் இருக்கும் நிலையில், தற்போது குடும்ப சொத்து தகராறு வெளிச்சத்திற்கு வந்துள்ளது. இந்த சம்பவம் குறித்து லோக் ஜனசக்தி கட்சியின் செய்தித் தொடர்பாளர் ராஜேஷ் பட் கூறுகையில், ‘மறைந்த ராம் விலாஸ் பஸ்வானின் மனைவி ராஜ்குமாரி தேவியை, முன்னாள் ஒன்றிய அமைச்சர் பசுபதி குமார் பராஸின் குடும்பத்தினர் அடைத்து வைத்துள்ளனர்.
மேலும் அவரிடம் தகாத முறையில் நடந்து கொண்டனர். இவ்விசயத்தில் மாநில அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றார். ஆனால் மேற்கண்ட விவகாரம் தொடர்பாக போலீசில் புகார் அளிக்கப்படாததல், இதுகுறித்து போலீசாரும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது. இருந்தும் தற்போது ராஜ்குமாரி தேவி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சையில் இருந்து வருகிறார்.
The post குடும்ப சொத்து விவகாரத்தால் ஒன்றிய அமைச்சரின் பெரியம்மாவை வெளியேற்றிய கும்பல்: பீகாரில் பரபரப்பு appeared first on Dinakaran.