நாகர்கோவில்: கன்னியாகுமரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கைதிகளுக்கான சிகிச்சை வார்டு இல்லாமல் இருந்தது. இதன் காரணமாக சிகிச்சைக்கு அனுமதிக்கப்படும் கைதிகள் பொதுமக்கள் பயன்படுத்தும் பொது சிகிச்சை வார்டுகளில் அனுமதிக்கப்பட்டு இருந்தனர். இதன் காரணமாக பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகள் இருந்தன.
இதையடுத்து ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கைதிகளுக்கான சிறப்பு சிகிச்சை வார்டு அமைக்கப்பட வேண்டும் என கோரிக்கை எழுந்தது. நீண்ட காலமாக நிலுவையில் இருந்த இந்த கோரிக்கையின் அடிப்படையில் குமரி மாவட்ட எஸ்.பி. ஸ்டாலின், கைதிகளுக்கு தனி சிகிச்சை வார்டு அமைப்பது தொடர்பாக மாவட்ட நிர்வாகம் மற்றும் மருத்துவக் கல்லூரி நிர்வாகத்துடன் ஆலோசனை மேற்கொண்டார். இதன் அடிப்படையில் தற்போது மருத்துவக் கல்லூரி வளாகத்தில் செயல்பட்டு வந்த கட்டிடம் ஒன்று கைதிகளுக்கான சிகிச்சை வார்டாக (இல்ல வாசிகள் வார்டு) மாற்றப்பட்டுள்ளது. இல்ல வாசிகள் சிகிச்சை வார்டை எஸ்.பி. ஸ்டாலின் இன்று காலை திறந்து வைத்தார்.
மருத்துவக் கல்லூரி முதல்வர் டாக்டர் ராமலட்சுமி, மருத்துவமனை கண்காணிப்பாளர் கிங்ஸ்லி, உறைவிட மருத்துவர் ஜோசப்சென், உதவி உறைவிட மருத்துவர் டாக்டர் விஜயலட்சுமி, ஏ.எஸ்.பி. லலித் குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர். பின்னர் நிருபர்களிடம் எஸ்.பி. ஸ்டாலின் கூறுகையில் , குமரி மாவட்டத்தில் உள்ள சிறைகளில் இருக்கும் கைதிகளுக்கான சிறப்பு சிகிச்சை வார்டு திறக்கப்பட்டு இருக்கிறது. பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு காரணங்கள் இருந்ததால் அவர்களுக்கு தனியாக இந்த சிகிச்சை வார்டு வைக்கப்பட்டிருக்கிறது. மொத்தம் ஒன்பது படுக்கைகள் வசதி செய்யப்பட்டு இருக்கிறது.
முழுவதும் சிசிடிவி கண்காணிப்பில் இந்த சிகிச்சை வார்டு செயல்படும். 24 மணி நேரமும் போலீசார் பாதுகாப்பு பணியில் இருப்பார்கள். தற்போது மூன்று கைதிகள் உடல்நிலை பாதிக்கப்பட்டு மருத்துவக் கல்லூரியில் சிகிச்சையில் இருக்கிறார்கள். அவர்கள் விரைவில் இந்த சிறப்பு சிகிச்சை வார்டுக்கு மாற்றப்படுவார்கள் என்றார். மேலும் அவர் கூறுகையில், குமரி மாவட்டத்தில் தொடங்கப்பட்டுள்ள ஊர்க்காவல் கண்காணிப்பு திட்டத்திற்கு பொதுமக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருக்கிறது. பல்வேறு தகவல்கள் இதன் மூலம் வந்து கொண்டிருக்கின்றன. விபத்துக்களை குறைக்கும் வகையில் காவல்துறையினர் வாகன சோதனை மட்டுமின்றி பல்வேறு விழிப்புணர்வு நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறார்கள். இதன் மூலம் கடந்தாண்டு 4 மாத நிலவரங்களை ஒப்பிடுகையில் 60% வரை விபத்துக்கள் குறைந்திருக்கின்றன என்றார்.
The post குமரி மருத்துவ கல்லூரியில் கைதிகளுக்கான சிறப்பு சிகிச்சை வார்டு: எஸ்.பி. ஸ்டாலின் திறந்து வைத்தார் appeared first on Dinakaran.