சென்னை: குமரி மாவட்டத்தின் சுற்றுலா மேம்பாட்டுக்கு ரூ.2000 கோடி ஒதுக்க வேண்டும் என நாடாளுமன்றத்தில் விஜய் வசந்த் எம். பி கோரிக்கை விடுத்துள்ளார். கன்னியாகுமரியில் மிக தெளிவான கடற்கரைகள், மலைகள், அருவிகள், நீர் நிலைகள் என இயற்கை வளம் கொண்டது. விவேகானந்தர் பாறை, திருவள்ளுவர் சிலை, கடலில் கண்ணாடிப் பாலம், திற்பரப்பு அருவி, மாத்தூர் தொட்டி பாலம், பத்மநாபபுரம் அரண்மனை என உலக பெற்ற சுற்றுலா மையங்கள் அமைந்துள்ளது.
கடந்த வருடம் 2 லட்சத்திற்கு மேற்பட்ட உள்நாட்டு சுற்றுலா பயணிகளும், சுமார் 50, 000 வெளிநாட்டு சுற்றுலா பயணிகளும் குமரிக்கு வருகை தந்துள்ளனர். இத்தகைய பெரும் கூட்டத்தினை எதிர் கொள்வதற்கான அடிப்படை கட்டமைப்பு இல்லாமல் இங்குள்ள சுற்றுலா தலங்கள் காணப்படுகின்றன. மேலும் சுற்றுசூழலை மேம்படுத்தவும், பாரம்பரிய மற்றும் இயற்கை தளங்களை பாதுகாக்கவும் வேண்டியது கட்டாயம்.
கன்னியாகுமரி மாவட்டம் மேம்படுத்தப்பட்ட ஒரு சுற்றுலா தலமாக மாறுவதன் மூலம் இங்குள்ள மக்களும், சிறு குறு வணிகர்களும் பயனடைந்து, வேலை வாய்ப்பினையும் பெருக்க இது காரணமாக அமையும். இதனை கருத்தில் கொண்டு கன்னியாகுமரி மாவட்டத்தை உலகின் தலை சிறந்த சுற்றுலா தலமாக மாற்றிட ஒன்றிய அரசு முன் வரவேண்டும். அதற்காக சிறப்பு நிதியாக ரூ.2000 கோடியை ஒன்றிய அரசு ஒதுக்க வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டார். மக்களவையில் 377 ஆம் விதியின் கீழ் இந்த முக்கியமான கோரிக்கையை வைத்தார்.
The post குமரி மாவட்டத்தின் சுற்றுலா மேம்பாட்டுக்கு ரூ.2000 கோடி ஒதுக்க வேண்டும்: நாடாளுமன்றத்தில் விஜய் வசந்த் எம். பி கோரிக்கை appeared first on Dinakaran.