பிரயாக்ராஜ்: மகா கும்பமேளாவில் நிகழ்ந்த கூட்ட நெரிசலில் சிக்கி 31 பேர் பலியான சம்பவம் குறித்து இதுவரை எப்ஐஆர் பதிவு செய்யவில்லை என்று உத்தரபிரதேச டிஜிபி தெரிவித்தார். உத்தரப் பிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் நடைபெறும் மகா கும்பமேளாவில் கடந்த 29ம் தேதி மவுனி அமாவாசையன்று (தை அமாவாசை) ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 31 பேர் உயிரிழந்தனர். 60 பேர் படுகாயம் அடைந்தனர். உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.25 லட்சம் இழப்பீடு வழங்கப்படும்.
விபத்து குறித்து அலகாபாத் உயர் நீதிமன்றத்தின் ஓய்வு பெற்ற நீதிபதி ஹர்ஷ் குமார் தலைமையில், முன்னாள் காவல் துறை இயக்குநர் (டிஜிபி) வி.கே.குப்தா மற்றும் ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி டி.கே.சிங் ஆகியோர் கொண்ட குழு அமைக்கப்பட்டது. மேற்கண்ட விசாரணை ஆணையம் சம்பந்தப்பட்ட அதிகாரிகளையும், சம்பவம் நடந்த இடத்தையும் பார்வையிட்டு வருகிறது. இந்த விசாரணையை முடிக்க ஆணையத்துக்கு ஒரு மாத கால அவகாசம் வழங்கப்பட்டுள்ள நிலையில், ஆணையம் தனது விசாரணையை விரைவாக முடிக்க முயற்சிக்கும் என்று ஆணையத்தின் தலைவர் ஹர்ஷ் குமார் தெரிவித்தார். இந்நிலையில் சம்பந நாளில் நடந்த கூட்ட நெரிசல் குறித்து உத்தரபிரதேச காவல்துறையும் தனியாக விசாரணை நடத்தி வருகிறது.
கூட்ட நெரிசல் தொடர்பான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பகுப்பாய்வு செய்து வருகிறது. இது உத்தரபிரதேச டிஜிபி பிரசாந்த் குமார் கூறுகையில், ‘கூட்ட நெரிசலில் பக்தர்கள் சிக்கியது தொடர்பான புகைப்படங்கள், வீடியோக்கள் சமூக ஊடகங்களில் வெளிவந்தன. இவற்றை பகுப்பாய்வு செய்து வருகிறோம். கூட்ட நெரிசல் குறித்து இதுவரை எப்.ஐ.ஆர் பதிவு செய்யப்படவில்லை. விசாரணை ஆணையம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறது. உத்தரபிரதேச காவல்துறையால் தனியாக விசாரணை நடத்தி வருகிறது’ என்று கூறினார்.
பொய் தகவல் பரப்பிய 8 பேர் மீது வழக்கு;
மகா கும்பமேளா குறித்து தவறான தகவல்களை சமூக வலைதளங்களில் பரப்பிய எட்டு பேர் மீது போலீசார் எப்ஐஆர் பதிவு செய்துள்ளனர். இதுகுறித்து உத்தரபிரதேச ேபாலீஸ் அதிகாரிகள் கூறுகையில், ‘மகா கும்பமேளா விழாவை ‘மரண விழா’ என்றும், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேர் கூட்ட நெரிசலில் சிக்கி இறந்துவிட்டதாகவும், அவர்களின் உறவினர்கள் பிரேத பரிசோதனை கிடங்கில் இருந்து உடல்களை சுமக்க செல்ல வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளதாகவும் ஒரு வீடியோ வெளியானது. உண்மையில் அந்த வீடியோ நேபாளத்தைச் சேர்ந்தது. தொடர் விசாரணைக்கு பின்னர் இதுபோன்ற அவதூறு மற்றும் தவறான தகவல்களை எக்ஸ் சமூக வலைதளங்கில் பரப்பிய 7 பேர் எப்ஐஆர் பதியப்பட்டது. அதேபோல் இன்ஸ்டாகிராமில் வெளியான ஒரு வீடியோவில், இறந்த பக்தர்களின் உடல்கள் மகா கும்பத்தில் ஆற்றில் மிதக்கின்றன என்றும், இறந்தவர்களின் உடல்கள் ஆற்றில் வீசப்படுவதாகவும் பொய்யான வீடியோ வெளியானது. இந்த வீடியோவை வெளியிட்ட நபர் மீதும் வழக்குபதியப்பட்டுள்ளது. பொய்யான மற்றும் தவறான தகவல்களை பரப்புவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது’ என்று கூறினர்.
The post கும்பமேளாவில் 31 பேர் பலியான விவகாரம்; இதுவரை எப்ஐஆர் எதுவும் பதிவு செய்யவில்லை: உத்தரபிரதேச டிஜிபி தகவல் appeared first on Dinakaran.