டெல்லி: கும்பமேளாவுக்குச் சென்ற மக்களை ஒன்றிய அரசு காப்பாற்றவில்லை என மக்களவையில் கனிமொழி எம்.பி விமர்சித்துள்ளார். 2025-26 ஆம் ஆண்டிற்கான நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் கடந்த ஜனவரி மாதம் 31ஆம் தேதி முதல் நடைபெற்று வருகிறது. பிப்ரவரி. 1ஆம் தேதி ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பட்ஜெட்டை தாக்கல் செய்தார்.
ஆண்டின் முதல் கூட்டத் தொடர் என்பதால், குடியரசுத் தலைவர் உரையுடன் கூட்டம் தொடங்கியது. இன்று குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது மக்களவை உறுப்பினர்கள் உரையாற்றினர். அப்போது பேசிய திமுக எம்.பி. கனிமொழி எதிர்க்கட்சிகளை ஒடுக்க சிபிஐ, அமலாக்கத்துறையை பயன்படுத்திய பாஜக தற்போது ஆளுநர்களை பயன்படுத்துகிறது என்ற கனிமொழி பேசினார். ஆனால் மக்களவையில் ஆளுநர் தொடர்பான கருத்துகளை முன்வைக்க கனிமொழி எம்.பி.க்கு அனுமதி மறுக்கப்பட்டது. பின்னர், கும்பமேளா குறித்து அவர் பேசுகையில், உத்தரபிரதேச மாநிலத்தில் நடந்து வரும் கும்பமேளாவில் உயிரிழந்த மக்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன்.
“கும்பமேளாவுக்கு சென்ற மக்களை அரசு காப்பாற்றவில்லை
ஒன்றிய அரசும், மாநில அரசும் தங்களை பாதுகாக்கும் என்ற நம்பிக்கையில் கும்பமேளாவில் மக்கள் பங்கேற்றனர். மதமும் அரசியலும் கலக்கப்படும்போது அப்பாவி மக்கள்தான் துயரத்துக்கு உள்ளாக்கப்படுகின்றனர்.
கும்பமேளா நெரிசலில் சிக்கி பலியானோர் எத்தனை பேர்?
கும்பமேளா நெரிசலில் சிக்கி எத்தனை பேர் உயிரிழந்தனர் என்பது கூட தெரியவில்லை. கும்பமேளா நெரிசல் குறித்து விவாதம் நடத்தக் கூட ஒன்றிய அரசு அனுமதிக்கவில்லை என தெரிவித்தார். ஒருவேளை டெல்லி தேர்தல் முடிந்தவுடன் அறிவிப்பார்களோ? இது ஒரு மனிதாபிமானமற்ற செயலல்லவா?.
திராவிட மரபின் மகத்தான மரபை நீங்கள் மறைக்க நினைக்கிறீர்கள்
இந்தியாவின் வரலாற்றைப் பற்றி நீங்கள் பேசும்போது 3,000 ஆண்டுகளுக்கு முந்தைய வேத காலத்தைப் பற்றி பேசுகிறீர்கள். ஆனால், இந்தியாவில் இரும்பின் பயன்பாடு 5,300 ஆண்டுகளுக்கு முன்பு தமிழகத்தில் இருந்து தொடங்கியது என்று ஆய்வு முடிவுகள் அறிவியல் பூர்வமாக வெளியாகியுள்ளது. தூத்துக்குடி மாவட்டம் சிவகளையில் இது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த பெருமைக்குரிய அறிவிப்பை முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார். ஆனால், இந்த கண்டுபிடிப்பு குறித்து இன்றுவரை ஒன்றிய அரசு வாய்த்திறக்கவில்லை. திராவிட மரபின் மகத்தான மரபை நீங்கள் மறைக்க நினைக்கிறீர்கள் இவ்வாறு தெரிவித்தார்.
The post கும்பமேளாவுக்குச் சென்ற மக்களை ஒன்றிய அரசு காப்பாற்றவில்லை: மக்களவையில் திமுக எம்.பி கனிமொழி விமர்சனம் appeared first on Dinakaran.