புதுடெல்லி: மகா கும்பமேளாவில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 30 பக்தர்கள் பலியான விவகாரம் குறித்து விவாதிக்க வலியுறுத்தி, மக்களவையில் எதிர்க்கட்சி எம்பிக்கள், சபாநாயகர் இருக்கையை முற்றுகையிட்டு பிரதமர் மோடி, உபி முதல்வர் யோகி ஆதித்யநாத்துக்கு எதிராக கண்டன கோஷமிட்டு கடும் அமளியில் ஈடுபட்டனர். இதே விவகாரத்தில் மாநிலங்களவையில் விவாதம் நடத்த அனுமதி மறுக்கப்பட்டதைத் தொடர்ந்து எதிர்க்கட்சியினர் வெளிநடப்பு செய்தனர். உத்தரப்பிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் மகா கும்பமேளா கடந்த மாதம் 13ம் தேதி தொடங்கி வரும் 26ம் தேதி வரை 45 நாட்கள் நடக்கிறது.
இதில், கங்கை, யமுனை, சரஸ்வதி நதிகள் இணையும் திரிவேணி சங்கமம் பகுதியில் தினமும் லட்சக்கணக்கான பக்தர்கள் புனித நீராடி வருகின்றனர். மகா கும்பமேளாவில் 45 கோடி பக்தர்கள் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படும் நிலையில், கடந்த 29ம் தேதி மவுனி அமாவாசையையொட்டி ஒரே நாளில் சுமார் 8 கோடி பேர் குவிந்தனர். ஆனால், கும்பமேளாவில் விஐபிக்களை வரவேற்பதிலும், அவர்களுக்கு வசதிகள் செய்து அரசியல் விளம்பரம் தேடுவதிலும் மட்டுமே கவனம் செலுத்தும் உபி முதல்வர் யோகி ஆதித்யநாத் அரசு, சாமானிய பக்தர்களுக்கு வேண்டிய ஏற்பாடுகளை செய்யவில்லை என குற்றம்சாட்டப்படுகிறது.
இத்தகைய நிர்வாக குறைபாடுகளால் மவுனி அமாவாசை தினத்தன்று அதிகாலையில் கும்பமேளாவில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 30 பக்தர்கள் பலியாகினர். 60க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். தடுப்புகளை தாண்டி பக்தர்கள் முன்னேற முடிந்ததால் நெரிசல் ஏற்பட்டதாக உபி காவல்துறை கூறி உள்ளது. இந்த விபத்தில் பலியானவர்கள் எண்ணிக்கையை பல மணி நேரமாக உபி அரசு வெளியிடாமல் இருந்தது பெரும் சந்தேகங்களை ஏற்படுத்தி உள்ளது. எனவே, கும்பமேளா விவகாரம் குறித்து நாடாளுமன்றத்தில் விவாதிக்க வேண்டுமென ஒட்டுமொத்த எதிர்க்கட்சிகளும் பட்ஜெட் தொடருக்கான அனைத்துக் கட்சி கூட்டத்திலேயே கோரிக்கை விடுத்திருந்தன.
இந்நிலையில், கடந்த 31ம் தேதி ஜனாதிபதி உரையுடன் தொடங்கிய நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரில், கடந்த 1ம் தேதி நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் ஒன்றிய பட்ஜெட்டை தாக்கல் செய்ததைத் தொடர்ந்து வார விடுமுறை முடிந்து, முதல் முறையாக இரு அவைகளும் நேற்று காலை தொடங்கின. மக்களவை காலை 11 மணிக்கு கூடியதும், வழக்கமான அலுவல்களின்படி, கேள்வி நேரத்தை தொடங்குவதாக சபாநாயகர் ஓம்பிர்லா அறிவித்தார். ஆனால், கேள்வி நேரத்தில் ஒத்திவைத்து விட்டு, மகா கும்பமேளா நெரிசலில் பக்தர்கள் உயிரிழப்பு தொடர்பாக விவாதம் நடத்த வேண்டுமென எதிர்க்கட்சி எம்பிக்கள் வலியுறுத்தினர்.
அதற்கு அனுமதி மறுத்த சபாநாயகர் ஓம்பிர்லா, ஒரு மணி நேரம் கேள்வி நேரத்திற்குப் பிறகு ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் விவாதத்தின் போது, அப்பிரச்னையை எழுப்பலாம் என்றார். இதை ஏற்காத எதிர்க்கட்சி எம்பிக்கள், சபாநாயகர் இருக்கையை முற்றுகையிட்டு அமளியில் ஈடுபட்டனர். ‘சனாதனத்திற்கு எதிராக ஒன்றிய அரசு பதவி விலக வேண்டும்’ எனவும், நெரிசலில் சிக்கி பலியானவர்களின் பட்டியலை உபி அரசு வெளியிட வேண்டுமெனவும் முழக்கமிட்டனர். மேலும் கும்பமேளாவில் நிர்வாக குறைபாடுகளுக்கு பொறுப்பேற்காத பிரதமர் மோடி மற்றும் உபி முதல்வர் யோகி ஆதித்யநாத்தை கண்டித்து கோஷமிட்டனர்.
இதனால் அவையில் பெரும் பரபரப்பு நிலவியது. கேள்வி நேரம் முடியும் வரையிலும் எதிர்க்கட்சி எம்பிக்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். எதிர்க்கட்சிகளின் அமளிக்கு நடுவே கேள்வி நேரம் நடத்தப்பட்டது. இதில் 18 கேள்விகள் எழுப்பப்பட்டன. பொதுவாக கேள்வி நேரத்தில் 20 கேள்விகள் வரையிலும் எடுத்துக் கொள்ளப்படும். பின்னர் கேள்வி நேரம் முடிந்ததும், காங்கிரஸ், திமுக, திரிணாமுல் காங்கிரஸ் மற்றும் சமாஜ்வாடி உள்ளிட்ட எதிர்க்கட்சி உறுப்பினர்கள் சிறிது நேரம் வெளிநடப்பு செய்து விட்டு அவைக்கு திரும்பினர். அதைத் தொடர்ந்து ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதம் தொடர்ந்தது.
இதே போல, மாநிலங்களவை கூடியதும், மகா கும்பமேளா விவகாரம் குறித்து விவாதம் நடத்த விதி 267ன் கீழ் 9 நோட்டீஸ்களை எதிர்க்கட்சி எம்பிக்கள் தந்திருப்பதாக அவைத்தலைவர் ஜெகதீப் தன்கர் கூறினார். இந்த விவகாரத்தில் முந்தைய உத்தரவுகளை மேற்கோள் காட்டிய அவைத்தலைவர், 9 நோட்டீஸ்களையும் ஏற்க மறுத்து திட்டமிட்டபடி பூஜ்ய நேரத்தை தொடங்கினார். இதற்கு காங்கிரஸ், திமுக, சமாஜ்வாடி, ஆம் ஆத்மி, ஆர்ஜேடி, சிபிஐ மற்றும் சிபிஎம் உள்ளிட்ட எதிர்க்கட்சி எம்பிக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து அமளியில் ஈடுபட்டனர். பின்னர் அவர்கள் வெளிநடப்பு செய்தனர். பூஜ்ய நேரத்திற்குப் பின்னர் மாநிலங்களவையிலும் ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இனிவரும் நாட்களிலும் மகா கும்பமேளா விவகாரம் நாடாளுமன்றத்தில் பெரும் புயலை கிளப்பும் என எதிர்பார்க்கப்படுகிறது.
* நம்பி வந்த மக்களை பாதுகாக்காத ஒன்றிய, உபி அரசுகள்
ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்தில் பல எதிர்க்கட்சி உறுப்பினர்களும் கும்பமேளா விவகாரத்தை எழுப்பினர். திமுக எம்பி கனிமொழி பேசுகையில், ‘‘கும்பமேளா நெரிசலில் சிக்கி பலியானவர்களின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், வருத்தத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன். பலியான பக்தர்கள் ஒன்றிய அரசும், உபி அரசும் தங்களை பாதுகாக்கும் என நம்பி கும்பமேளாவுக்கு வந்தவர்கள். ஆனால் யாருமே அவர்களை பாதுகாக்கவில்லை. ஒன்றிய அரசின் அணுகுமுறையால் சமூகத்தில் பெரும் பிளவுகள் ஏற்பட வழிவகுக்கிறது. மதமும், அரசியலும் கலக்கும் போது, அப்பாவி பொதுமக்கள் பாதிக்கப்படுகின்றனர். இப்போதும் கூட கும்பமேளா நெரிசலில் சிக்கி உண்மையிலேயே எத்தனை பேர் பலியானார்கள் என்ற விவரம் கூட நமக்கு தெரியாது’’ என்றார்.
* உண்மையான பலி எண்ணிக்கை என்ன?
ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்தில் பேசிய சமாஜ்வாடி எம்பி நரேஷ் சந்திரா படேல், ‘‘கும்பமேளா நெரிசல் இயற்கை பேரிடர் அல்ல. அது யோகி அரசின் தோல்வியின் அடையாளம். கட்டுக்கடங்காத கூட்டம் குவிவதை தடுக்க அதிகாரிகள் ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை? நெரிசலில் இறந்தவர்களின் பட்டியலை ஏன் இன்னமும் வெளியிடவில்லை? இரட்டை இன்ஜின் அரசு என கூறிக் கொள்பவர்கள் அரசு நிர்வாகத்தை கேலிக்கூத்தாக்குகின்றனர்’’ என்றார். திரிணாமுல் காங்கிரஸ் எம்பி ககோலி கோஸ் தஸ்டிதார் பேசுகையில், ‘‘ஜனாதிபதி தனது உரையில் கும்பமேளா பெருந்துயரம் குறித்து வெறும் 61 வார்த்தைகள் மட்டுமே பேசியது மிகவும் வருத்தமளிக்கிறது’’ என்றார்.
The post கும்பமேளா உயிரிழப்பு குறித்து விவாதிக்க கோரி மக்களவையில் எதிர்க்கட்சிகள் அமளி: சபாநாயகர் இருக்கையை முற்றுகையிட்டு மோடி, யோகிக்கு எதிராக முழக்கம் appeared first on Dinakaran.