திருவனந்தபுரம்: கேரள மாநிலம் குருவாயூரை சேர்ந்தவர் ஜஸ்னா சலீம் (26). ஓவிய கலைஞரான இவர், குருவாயூர் கிருஷ்ணனின் ஏராளமான படங்களை வரைந்துள்ளார். இவரது கிருஷ்ணனின் ஓவியத்திற்கு கேரளாவில் டிமாண்ட் அதிகமாகும். கிருஷ்ணனின் தீவிர பக்தையான இவர், அடிக்கடி குருவாயூர் கோயிலுக்கு செல்வது வழக்கம். கடந்த சில மாதங்களுக்கு முன் குருவாயூர் வந்த பிரதமர் மோடியிடம் ஜஸ்னா சலீமை ஒன்றிய அமைச்சர் சுரேஷ் கோபி அறிமுகம் செய்து வைத்தார்.
அப்போது தான் வரைந்த குருவாயூர் கிருஷ்ணனின் ஓவியத்தை பிரதமர் மோடிக்கு அவர் பரிசாக அளித்தார். இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன் ஜஸ்னா சலீம் குருவாயூர் கோயில் வளாகத்தில் தடை செய்யப்பட்ட பகுதியில் வைத்து தன்னுடைய பிறந்தநாளை கேக் வெட்டி கொண்டாடி சமூக வலைதளங்களில் பகிர்ந்தது சர்ச்சையை ஏற்படுத்தியது. இது கேரள உயர் நீதிமன்றத்தின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.
இதையடுத்து குருவாயூர் கோயிலில் தடை செய்யப்பட்ட பகுதியில் யாரும் வீடியோ எடுக்கவோ, நிகழ்ச்சிகள் எதுவும் நடத்தவோ கூடாது என்று உயர்நீதிமன்றம் தடை விதித்தது. இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன் இந்த தடை உத்தரவை மீறி ஜஸ்னா சலீம் குருவாயூர் கோயிலில் தடை செய்யப்பட்ட பகுதியில் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பகிர்ந்தார். மேலும் குருவாயூர் கோயிலின் முன்புறம் தீபத்தூணின் அருகே உள்ள கிருஷ்ணனின் சிலைக்கு இவர் காகித மாலையை அணிவித்தார்.
இதையும் வீடியோவாக எடுத்து அவர் சமூக வலைதளங்களில் பகிர்ந்தார். இது கடும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதுகுறித்து கேரள உயர்நீதிமன்றம், ஜஸ்னா சலீம் மீது வழக்கு பதிவு செய்ய குருவாயூர் போலீசுக்கு உத்தரவிட்டது. இதைத் தொடர்ந்து கலவரத்தை தூண்டும் வகையில் நடந்து கொண்டதாக கூறி குருவாயூர் போலீசார் ஜஸ்னா சலீம் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்.
The post குருவாயூர் கோயிலில் கிருஷ்ணருக்கு காகித மாலை இளம்பெண் மீது வழக்கு appeared first on Dinakaran.