புதுடெல்லி: குறுகிய கால விசாவில் இந்தியா வந்தவர்களில் 537 பாகிஸ்தான் மக்கள் வாகா எல்லை வழியாக வெளியேற்றப்பட்ட நிலையில், பாகிஸ்தானில் இருந்து மேலும் 850 இந்தியர்கள் நாடு திரும்பினர். ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் தீவிரவாத தாக்குதலுக்கு பாகிஸ்தானின் நேரடி தொடர்பு இருப்பதால், இந்தியாவில் தங்கியிருக்கும் பாகிஸ்தான் குடிமக்களுக்கு வழங்கப்பட்ட குறுகிய கால விசாக்களை ஒன்றிய அரசு ரத்து செய்தது. மேலும் அவர்களை உடனடியாக நாட்டை விட்டு வெளியேற வேண்டும் என்ற உத்தரவை பிறப்பித்தது. இதன் விளைவாக, ஏப்ரல் 24 முதல் நேற்று வரை நான்கு நாட்களில் 9 தூதரக அதிகாரிகள் உட்பட 537 பாகிஸ்தான் குடிமக்கள், பஞ்சாபில் உள்ள அட்டாரி-வாகா எல்லை வழியாக இந்தியாவை விட்டு வெளியேறியுள்ளனர்.
இதே காலகட்டத்தில், 14 தூதரக அதிகாரிகள் உட்பட 850 இந்தியர்கள் பாகிஸ்தானில் இருந்து அட்டாரி எல்லை வழியாக இந்தியாவுக்கு திரும்பியுள்ளனர். இந்தியாவில் தங்கியிருந்த பாகிஸ்தான் குடிமக்களுக்கு கடந்த 26 அன்றுடன் 48 மணி நேர காலக்கெடு முடிந்தது. மருத்துவ விசாக்கள் பெற்றவர்களுக்கு மட்டும் நாளை (ஏப். 29) வரை கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. இருப்பினும், நீண்ட கால விசாக்கள் மற்றும் தூதரக அல்லது அதிகாரப்பூர்வ விசாக்கள் பெற்றவர்கள் மேற்கண்ட உத்தரவில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளனர். நீண்ட கால விசாக்களை பொருத்தமட்டில், பாகிஸ்தானில் இருந்து இந்திய குடியுரிமை பெறுவதற்காக வரும் இந்து மற்றும் சீக்கிய சமூகத்தினருக்கு வழங்கப்படுகின்றன.
இந்தியாவில் இருந்து வெளியேற்றப்பட்ட பாகிஸ்தானியர்கள், பஞ்சாப்பின் அமிர்தசரஸ் மாவட்டத்தில் உள்ள அட்டாரி எல்லையில், தங்கள் நாட்டிற்கு திரும்புவதற்காக வாகனங்களில் வரிசையாக காத்திருந்தனர். பல இந்தியர்கள் தங்கள் உறவினர்களுக்கு விடை கொடுக்க வந்திருந்தனர். இதனால் பிரிவின் வலி அவர்கள் முகங்களில் தெளிவாக தெரிந்தது. இந்தியாவில் இருந்து வெளியேறிய சில பாகிஸ்தான் குடிமக்கள், இந்திய விமான நிலையங்கள் வழியாக மூன்றாம் நாடுகளின் வழியாகவும் இந்தியாவை விட்டு வெளியேறியிருக்கலாம்; ஏனெனில் இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே நேரடி விமான சேவை இல்லை. இந்தியாவை விட்டு வெளியேறிய பாகிஸ்தான் குடிமக்களில் பலர், பஹல்காம் தீவிரவாத தாக்குதலை கடுமையாக கண்டித்தனர்.
பஹல்காம் தாக்குதலைத் தொடர்ந்து, இந்தியா-பாகிஸ்தான் இடையிலான உறவுகள் மேலும் மோசமடைந்துள்ளன. பாகிஸ்தான் குடிமக்கள் வெளியேற்றம், தூதரக நடவடிக்கைகள், சிந்து நதி நீர் ஒப்பந்தம் நிறுத்தி வைப்பு மற்றும் எல்லைக் கோட்டில் அதிகரித்து வரும் பதற்றம் ஆகியவை இரு நாடுகளுக்கும் இடையேயான மோதலின் தீவிரத்தை காட்டுகின்றன. இந்த நடவடிக்கைகள் தீவிரவாதத்திற்கு எதிரான இந்தியாவின் கடுமையான நிலைப்பாட்டையும், பாகிஸ்தானுக்கு எதிராக எடுக்கப்பட்ட நடவடிக்கையாகவும் பார்க்கப்படுகிறது.
The post குறுகிய கால விசாவில் இந்தியா வந்தவர்களில் 537 பாகிஸ்தான் மக்கள் வெளியேற்றம்: மேலும் 850 இந்தியர்கள் நாடு திரும்பினர் appeared first on Dinakaran.