இந்திய துணைக்கண்டம் பல்வேறு இனங்கள், கலாச்சாரங்கள், மொழிகள், மதங்கள் மற்றும் சாதிகளின் அடிப்படையில் அமைந்தது. மக்களிடையே எப்போதுமே ஒற்றுமை மனப்பான்மை மேலோங்கி இருக்கும். இந்திய நாட்டின் ஒற்றுமை என்றுமே ஒருமுகத்தன்மையின் அடிப்படையில் அமைந்ததில்லை. மாறாக, இந்தியா ‘வேற்றுமையில் ஒற்றுமை’ என்ற தத்துவதத்தின் அடிப்படையில், பன்முகத்தன்மையின் அடித்தளத்தில் கட்டமைக்கப்பட்ட நாடாகும்.
நம்முடைய முன்னோர்கள், அரசியல் அமைப்புச் சட்டத்தை வடிவமைத்தபோது, மத்திய – மாநிலங்களுக்கு இடையே ஆட்சி அமைப்பிலும், நிர்வாக முறைகளிலும் கருத்து வேறுபாடுகளை எதிர்பார்த்தனர். ஆகவே, தொலைநோக்கு பார்வையுடன், பரஸ்பர உரையாடல், நம்பிக்கை, கூட்டாட்சி நிர்வாகம் அடிப்படையிலான நிர்வாக முறையை ‘மாநிலங்களின் ஒன்றியம்’ என்ற ஜனநாயக உத்தரவாதம் அமைத்துள்ளனர்.