திருவனந்தபுரம்: யுஜிசி வரைவு விதி ஜனநாயகத்துக்கு விரோதமானது என்று கேரள முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார். திருவனந்தபுரத்தில் யுஜிசி வரைவு விதி எதிர்ப்பு மாநாட்டில் கேரள முதல்வர் பினராயி விஜயன் உரையாற்றினார். அப்போது பேசிய அவர்;
பல்கலை.யை அமைத்து நிர்வகிப்பது மாநிலம்தான்: பினராயி விஜயன்
அரசியல் சட்ட அட்டவணை 7 பிரிவு 32-ன் படி பல்கலை.யை அமைத்து நிர்வகிப்பது மாநில அரசின் கட்டுப்பாட்டில்தான் உள்ளது. உயர்கல்வி நிறுவனங்கள் நிர்வகிக்கும் விவகாரத்தில் அம்பேத்கர் கூறிய கருத்துகளை நினைவில் கொள்ள வேண்டும்.
கூட்டாட்சி முறைக்கு முரணானது யுஜிசி வரைவு விதி: பினராயி விஜயன்
யுஜிசி வரைவு விதி ஜனநாயகத்துக்கு விரோதமானது. யுஜிசியின் புதிய விதி பல்கலை. நிர்வாகத்தில் மாநில அரசுக்கு உள்ள பங்கை நிராகரிக்கிறது. யுஜிசி வரைவு விதி கூட்டாட்சி முறைக்கு முரணானது. துணைவேந்தரை நியமிக்கும் அதிகாரத்தை ஆளுநர் கையில் வழங்க வழிசெய்கிறது யுஜிசியின் புதிய விதி. ஆளுநர் பதவியை அரசியல் காரணங்களுக்காக ஒன்றிய அரசு பயன்படுத்துவதாக பினராயி விஜயன் குற்றச்சாட்டியுள்ளார். நாட்டின் உயர்கல்விக்கே பெரிய அச்சுறுத்தலாக யுஜிசியின் வரைவு விதி உள்ளது. கல்வித்துறையில் தொடர்பே இல்லாதவர்களை துணைவேந்தராக நியமிக்க வரைவு விதி வழி செய்கிறது.
வரைவு விதியை பின்பற்றாமைக்கு விதிக்கப்பட்டுள்ள தண்டனைகளும் மிகக் கடுமையாக உள்ளன.
யுஜிசி வரைவு விதியால் கல்வியின் தரம் குறையும்: பினராயி விஜயன்
யுஜிசி வரைவு விதி காரணமாக அரசியல் பின்புலம் உள்ளவர்கள் துணைவேந்தராக நியமிக்க வாய்ப்புள்ளது. கல்வித்துறை சாராதவர்களை நியமித்தால் உயர்கல்வியின் தரத்தில் பெரும் பாதிப்பு ஏற்படும். ஒரு துறையில் அடிப்படை பட்டம் பெறாதவரை விரிவுரையாளராக நியமிக்க வகை செய்யும் விதி உயர்கல்வி தரத்தை குறைத்துவிடும். வரைவு விதி தனியொரு நடவடிக்கையல்ல; மாநில அரசின் உரிமைகளை பறிப்பதற்கான நடவடிக்கைகளில் ஒன்றே யுஜிசி வரைவு.
மாநில அதிகாரத்தை பறிக்கும் வகையில் சட்டங்கள்: பினராயி
மாநில அதிகாரத்தை பறிக்கும் வகையில் கல்வி, விவசாயம், மின்துறை உள்பட பல துறைகள் சார்ந்து ஒன்றிய அரசு சட்டம் இயற்றியுள்ளது. கூட்டுறவு, கூட்டாண்மை பற்றி பேசுவோர் நிதிக்கமிஷன் பரிந்துரையையே மறைமுகமாக நிராகரிக்கின்றனர். மாநில அரசுக்கான நிதியை அபகரிக்கும் வகையில் நடவடிக்கைகளை ஒன்றிய அரசு மேற்கொள்கிறது. மாநில அமைச்சரவையின் அறிவுரைப்படி மட்டுமே ஆளுநர் செயல்பட வேண்டும். மாநில அதிகாரத்தை பறிப்பதில் எந்த எல்லைக்கும் ஒன்றிய அரசு போகும் என்பதற்கு எடுத்துக்காட்டு டெல்லி அரசின் சட்டம்.
அதிகாரத்தை மீறி ஆளுநர்கள் செயல்படுகின்றனர்: பினராயி
ஆளுநர்கள் நெருப்புடன் விளையாடுவதாக ஏற்கனவே உச்ச நீதிமன்றம் எச்சரித்துள்ளது. கேரளா உள்பட பல மாநிலங்களில் ஆளுநர்கள் அரசியல் அமைப்பு சட்ட அதிகாரத்தை மீறி செயல்பட முனைந்தனர்.
அரசியல் எஜமானர்கள் கூற்றுப்படி நடக்கும் ஆளுநர்கள்: பினராயி விஜயன்
எதிர்க்கட்சிகள் ஆளும் பல மாநிலங்களில் ஆளுநர்கள் தங்களது அரசியல் எஜமானர்கள் கூற்றுப்படி நடந்து கொள்கின்றனர். ஆளுநர்களின் ஜனநாயக விரோத நடவடிக்கைகளை எதிர்த்து பல மாநிலங்கள் உச்சநீதிமன்றத்தை நாடும் நிலை ஏற்பட்டது. பல்கலை. வேந்தர்களாக உள்ள ஆளுநர்கள் அரசியல் ரீதியில் பல்கலைக்கழகங்களில் தலையிடுகின்றனர். உயர்கல்வி நிறுவனங்களை நிர்வகிப்பதற்கான செலவில் 80 சதவீதம் மாநில அரசின் நிதியில் இருந்தே மேற்கொள்ளப்படுகிறது. கேரளாவில் பல்கலைக்கழகங்களை நிர்வகிக்க உயர்கல்வித்துறை மூலம் ரூ.1824 கோடியை மாநில அரசு செலவு செய்துள்ளது. பல்கலைக்கழகத்தை நிர்வகிப்பதில் இருந்து மாநில அரசுகளை முழுமையாக விலக்கி வைப்பதே யுஜிசி வரைவு விதியின் நோக்கம்.
உயர்கல்வித்துறையை வணிகமயமாக்கும் யுஜிசி வரைவு விதி: பினராயி
உயர்கல்வித்துறையை வணிகமயமாக்குவதற்கு யுஜிசி வரைவு விதி வழிவகுக்கிறது. உலக நாடுகள் புதியவற்றை கண்டுபிடிக்க பணம் செலவிடும் நேரத்தில் புராணங்களை உண்மை என கூற ஒன்றிய அரசு செலவு செய்கிறது. இந்தியாவில் உள்ள உயர் ஆராய்ச்சி நிறுவனங்கள்கூட புராணம், இதிகாசங்களை உண்மை என கூறிக்கொண்டு இருக்கின்றன. இந்த மாநாடு உயர்கல்வியை முற்போக்காகவும் முன்னேற்றத்துக்காகவும் கொண்டு செல்லும் வகையில் அமையும் என பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.
The post கூட்டாட்சி முறைக்கு முரணானது யுஜிசி வரைவு விதி; மாநில அதிகாரத்தை பறிக்கும் வகையில் சட்டங்கள்: கேரள முதல்வர் பினராயி விஜயன்!! appeared first on Dinakaran.