தமிழக வெற்றிக் கழக (தவெக) தலைவர் விஜய், கரூர் மாவட்டம் வேலுச்சாமிபுரத்தில் மேற்கொண்ட பிரச்சாரக் கூட்டத்தில், கூட்ட நெரிசலில் சிக்கி 18 பெண்கள், 9 குழந்தைகள் உள்பட 41 பேர் உயிரிழந்திருக்கின்றனர். இதற்கு முன்பு ஓர் அரசியல் கட்சியின் பிரச்சாரக் கூட்டத்தில் இதுபோன்ற அசம்பாவிதம் நடைபெற்றதில்லை என்கிற அளவுக்கு இந்தக் கூட்ட நெரிசல் மரணங்கள் பேசுபொருள் ஆகியிருக்கின்றன.
இந்தியாவில்… இந்தியாவில் கூட்ட நெரிசல் விபத்துகள் புதிதல்ல. மத நிகழ்வுகள், திருவிழாக்கள், ரயில் நிலையங்கள், மக்கள் திரள் கூடும் பொது நிகழ்ச்சிகள் உள்படப் பல்வேறு நிகழ்வுகளின்போது கூட்ட நெரிசல் காரணமாக உயிரிழப்புகள் ஏற்பட்டிருக்கின்றன. குறிப்பாக, இந்தியாவில் ஏற்படும் கூட்ட நெரிசல் விபத்துகளில் 70% மத நிகழ்வுகளில் ஏற்படுபவை என்கின்றன தரவுகள்.