அண்மையில் திரையரங்குகளில் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் ‘கூலி’ திரைப்படம், வசூல் சாதனைகளுக்காக மட்டுமன்றி, அதிர்ச்சியூட்டும் வன்முறைக் காட்சிகளுக்காகவும் பேசப்படுகிறது. ஒரு காலத்தில் திகில் திரைப்படங்களில் இடம்பெற்ற கொடூரக் கொலைகள், இன்றைய திரைப்படங்களின் தெருச்சண்டைக் காட்சிகளில்கூட மிக இயல்பான அம்சங்களைப் போல முன்வைக்கப்படுகின்றன. இத்தகைய அத்துமீறல்களின் உச்சமாக ‘கூலி’ திரைப்படம் அமைந்திருக்கிறது. படைப்புத்திறன் வெளிப்பாடு என்று இதைச் சாதாரணமாகக் கடந்து போய்விட முடியாது. சமூகத்தில் மிகுந்த பாதிப்பை ஏற்படுத்தும் போக்கு இது.
பொறுப்புணர்வின்மை: திரைப்படம் என்பது இயல்பு வாழ்க்கையை அப்படியே பதிவுசெய்யக்கூடிய ஊடகம் அல்ல என்பதும், சுவாரசியத்துக்காக இயல்பை மீறிய சித்தரிப்புகள் சேர்க்கப்படுவது கலையம்சத்தின்-பொழுதுபோக்கின் ஒரு பகுதி என்பதும் நாம் நன்கு அறிந்தவைதான். படைப்பாக்கத்துக்குக் கட்டுப்பாடுகள் விதிக்கப்படுவதும் ஏற்க முடியாதது. ஆனால், தனது படைப்பின் மூலம் சமூகத்துடன் ஊடாடும் ஒரு கலைஞருக்குக் குறைந்தபட்சப் பொறுப்புணர்வு அவசியம். இதை இன்றைய திரைக் கலைஞர்களில் பலர் மிகவும் அலட்சியத்துடன் புறந்தள்ளுகிறார்கள்.