லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினி நடிக்கும் படம், ‘கூலி’. இதில் சத்யராஜ், அமீர் கான், உபேந்திரா, நாகார்ஜுனா, ஸ்ருதிஹாசன் உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர். இதன் படப்பிடிப்பு சமீபத்தில் ஜெய்ப்பூரில் நடைபெற்றது. அங்கு ஆமீர் கான் பங்குபெற்ற காட்சிகள் படமாக்கப்பட்டன. அடுத்து இதன் படப்பிடிப்பு தாய்லாந்தில் நடைபெறுகிறது.
இந்நிலையில் சென்னை விமான நிலையத்துக்கு வந்த நடிகர் ரஜினிகாந்த், செய்தியாளர்களிடம் பேசும்போது, “கூலி படத்தின் படப்பிடிப்பு 70 சதவிகிதம் முடிவடைந்துவிட்டது. அடுத்த கட்டப் படப்பிடிப்பு வரும் 13-ம் தேதியிலிருந்து 28-ம் தேதி வரை தாய்லாந்தில் நடக்கிறது” என்றார். ஒருவர், அரசியல் தொடர்பான கேள்வி கேட்க முயன்றார். அப்போது, “அரசியல் தொடர்பான கேள்விகளைக் கேட்க வேண்டாம் என ஏற்கெனவே சொல்லியிருக்கிறேன்” என்று கூறிவிட்டுப் புறப்பட்டுச் சென்றார்.