டெல்லி: சிமெண்ட் தயாரிப்பில் முன்னணியில் உள்ள அல்ட்ரா டெக் நிறுவனம் கேபிள் வயர் உற்பத்தியில் இறங்க இருப்பதாக அறிவித்துள்ளது. இதன் எதிரொலியாக கேபிள் வயர் உற்பத்தியில் உள்ள நிறுவனங்களின் சந்தை மதிப்பு பெருமளவு சரிந்துள்ளது. இந்திய தொழில் மற்றும் வணிக சந்தையின் முன்னணி நிறுவனமான ஆதித்தியா பிர்லா குழுமத்தின் ஒரு அங்கமாக உள்ள அல்ட்ராடெக் நிறுவனம் சிமெண்ட் தயாரிப்பு மற்றும் விற்பனையில் முன்னணியில் உள்ளது. இந்நிறுவனம் சுமார் 18 ஆயிரம் கோடி ரூபாய் முதலீட்டில் கேபிள் ஒயர் உற்பத்தியை தொடங்க உள்ளதாக சமீபத்தில் அறிவித்தது. இந்த அறிவிப்பு பங்கு சந்தையில் பல்வேறு தாக்கத்தை ஏற்படுத்தியது.
குறிப்பாக அல்ட்ராடெக் நிறுவனத்தின் புதிய தொழில் முதலீட்டால் லாபம் குறையக்கூடும் என்ற முதலீட்டாளர்களின் அச்சத்தால் பங்குகளின் விலை 4.99 சதவீதம் குறைந்தது. புதன் கிழமை ரூ.10,968.45ல் முடிந்த அல்ட்ராடெக் பங்கு விலை வியாழக்கிழமை ரூ.547.80 குறைந்து ரூ.10,420.65 ஆக சரிந்தது. கேபிள் வயர் உற்பத்தியில் களமிறங்கும் அல்ட்ராடெக் நிறுவனத்தின் தாக்கம் ஏற்கனவே கேபிள் வயர் உற்பத்தியில் உள்ள சில முன்னணி நிறுவனங்களின் பங்கு விலையை பதம்பார்த்தது. பாலிகேப் நிறுவனத்தின் பங்கு 18.84 சதவீதமும், ஹவெல்ஸ் பங்கு 6.27 சதவீதமும், பினோலெக்ஸ் பங்கு 6 சதவீதமும், ஆர்.ஆர்.கேபிள் 19.8 சதவீதமும், கே.இ.ஐ இண்டஸ்ட்ரீஸ் பங்கு விலை 21 சதவீதமும் சரிந்தன. அல்ட்ராடெக் நிறுவனத்தின் முதலீட்டால் சில நிறுவனங்களின் சந்தை மதிப்பு ரூ.55 ஆயிரம் கோடி வரை சரிந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
The post கேபிள் வயர் உற்பத்தியில் கால் பதித்த அல்ட்ராடெக் நிறுவனம்: ஏற்கனவே உள்ள நிறுவனங்களின் பங்குகள் கடும் சரிவு appeared first on Dinakaran.