திருவனந்தபுரம்: கேரள மாநிலம் வயநாடு அருகே காப்பி பறிக்கும் பணியில் ஈடுபட்டு கொண்டிருந்த பழங்குடியின பெண்ணை அடித்து கொன்ற புலியை சுட்டுக்கொள்ள வனத்துறை அனுமதி வழங்கியுள்ளது. கேரளா மாநிலம் வயநாடு மானந்தவாடி அருகே மீன் முட்டி கிராமத்தில் விவசாய நிலத்தில் காபி தோட்டத்தில் காப்பி பறிக்கும் பணியில் ஈடுபட்ட போது புலி தாக்கியதில் ராதா என்ற பெண் உயிரிழந்தார். அச்சப்பன் என்பவர் மனைவி ராதா (வயது 48) என்பது தெரியவந்தது. காலையில் கணவர் அச்சப்பன் தான் மனைவி ராதாவை தோட்டத்தில் இறக்கிவிட்டு சென்றுள்ளார். அவர் நீண்ட நேரம் வீடு திரும்பவில்லை என்பதால் கணவர் விவசாய நிலத்திற்கு தேடி சென்றுள்ளார்.
அங்கு, ராதா சடலமாக கிடந்ததை பார்த்து அச்சப்பன் அதிர்ச்சி அடைந்தார். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறை அதிகாரிகள் விசாரணையில் ராதா புலி தாக்கி உயிரிழந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அவரது உடல் பிரேத பரிசோதனை செய்ய மானந்தவாடியில் உள்ள வயநாடு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்க முயன்ற போது, அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் புலியை சுட்டுக்கொள்ள வேண்டும். மேலும், உயிரிழந்த பெண்ணுக்கு உரிய நிவாரணம் வழங்க கோரி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த உயர் அதிகாரிகள் மற்றும் அமைச்சர்கள் பொதுமக்களிடம் போச்சுவார்த்தை நடத்தினார். அதில், புலியை மயக்க ஊசி செலுத்திப் பிடிக்க, வனத்துறை அமைச்சர் ஏ.கே.சசீந்திரன் உத்தரவிட்டார். மேலும் அவர், உயிரிழந்த ராதாவின் குடும்பத்திற்கு அரசு நிதியுதவி வழங்கும். வன விலங்கு தாக்குதலுக்கு நிரந்தர தீர்வு காண அரசு கடுமையாக பாடுபடுகிறது, என்றார். அதன் பின்னர் போராட்டம் கைவிடப்பட்டது. இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
The post கேரளாவில் புலி தாக்கி பழங்குடியின பெண் பலி: புலியை சுட்டுக் கொல்ல வனத்துறைக்கு அனுமதி appeared first on Dinakaran.