திருவனந்தபுரம்: கேரளாவில் சமீப காலமாக போதைப்பொருள் கடத்தலும், பயன்பாடும் மிகவும் அதிகரித்து வருகிறது. பள்ளி மாணவர்களில் தொடங்கி கல்லூரி மாணவர்கள், சாப்ட்வேர் இன்ஜினியர்கள், தொழிலாளர்கள் என பலரும் கஞ்சா, எம்டிஎம்ஏ, பிரவுன் சுகர் உள்பட போதைப் பொருளுக்கு அடிமையாகி வருகின்றனர். இதைத் தடுப்பதற்காக கேரளா முழுவதும் போலீசார், கலால் துறையினர் மற்றும் போதைப் பொருள் தடுப்புத் துறையினர் தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இதற்காக சிறப்பு தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.
இந்த தனிப்படையினர் நடத்தி வரும் சோதனையில் தினமும் 200க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டு வருகின்றனர். இவர்களிடமிருந்து பெருமளவு கஞ்சா, எம்டிஎம்ஏ மற்றும் போதைப் பொருட்கள் கைப்பற்றப்பட்டு வருகின்றன. இதற்கிடையே கடந்த 2021 முதல் கேரளாவில் எய்ட்ஸ் நோய் அதிகரித்து வருவது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக வாலிபர்களிடையே இந்த நோய் அதிகமாக பரவி வருகிறது. தற்போது சராசரியாக வருடத்திற்கு 1200 பேர் எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்படுகின்றனர்.
இவர்களில் 15 சதவீதம் பேர் 19க்கும் 25க்கும் இடைப்பட்ட வயது உடையவர்கள் ஆவர். இதற்கு முன்பு 43 வயதுக்கு மேற்பட்டவர்களுக்குத் தான் எய்ட்ஸ் பரவல் அதிகமாக காணப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கதாகும். போதைப்பொருள் பயன்படுத்துவது தான் வாலிபர்களுக்கு எய்ட்ஸ் பரவுவதற்கு முக்கிய காரணம் என்று தெரியவந்துள்ளது.
இதையடுத்து எய்ட்ஸ் பரவலை கட்டுப்படுத்துவதற்காக கேரளா முழுவதும் சுகாதாரத்துறையினர் தீவிர சோதனைகளை மேற்கொண்டு வருகின்றனர். இதில் மலப்புரம் மாவட்டம் வளாஞ்சேரி பகுதியில் நடத்திய சோதனையில் ஒரு வாலிபருக்கு எய்ட்ஸ் நோய் இருப்பது உறுதி செய்யப்பட்டது. அவரிடம் நடத்திய விசாரணையில் அந்த வாலிபர் போதை ஊசி பயன்படுத்தி வந்தது தெரியவந்தது. இதையடுத்து சுகாதாரத் துறையினர் போதைப் பொருள் பயன்படுத்தும் அவரது கூட்டாளிகளை கண்டுபிடித்து அவர்களையும் பரிசோதித்தனர்.
இதில் அவர்களில் மேலும் 9 பேருக்கு எய்ட்ஸ் பரவியது கண்டுபிடிக்கப்பட்டது. விசாரணையில் இவர்கள் அனைவரும் போதை ஊசி போடுவதற்கு ஒரே சிரிஞ்சை பயன்படுத்தியது தெரியவந்தது. தற்போது இந்த 10 வாலிபர்களும் அங்குள்ள அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். போதை ஊசி மூலம் எய்ட்ஸ் நோய் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகமாக இருக்கும் என்பதால் பரிசோதனையை தீவிரப்படுத்த சுகாதாரத் துறையினர் தீர்மானித்துள்ளனர்.
The post கேரளாவில் போதை ஊசி மூலம் இளைஞர்களிடம் பரவும் எய்ட்ஸ் நோய்: மலப்புரத்தில் 10 பேருக்கு கண்டுபிடிப்பு appeared first on Dinakaran.