திருவனந்தபுரம்: கேரள மாநிலம் கண்ணூரில் 2 மகன்களை கிணற்றில் வீசிக் கொன்று பெண் தற்கொலை செய்து கொண்டது பரபரப்பை ஏற்படுத்தியது. கேரள மாநிலம் கண்ணூர் அழிக்கோடு பகுதியைச் சேர்ந்தவர் ரமேஷ் பாபு. மீன்பிடி தொழில் செய்து வருகிறார். அவரது மனைவி பாமா(44). இவர்களுக்கு சிவானந்த்(14) அஷ்வந்த்(9) என்ற 2 மகன்கள் இருந்தனர். பாமாவுக்கு மனநல பாதிப்பு இருந்ததாக கூறப்படுகிறது. நேற்று முன்தினம் இரவு அனைவரும் வழக்கம் போல வீட்டில் தூங்கினர். நேற்று அதிகாலை சுமார் 2 மணியளவில் பாமாவின் தாய் எழுந்தபோது பாமா மற்றும் 2 மகன்களையும் படுக்கையில் காணவில்லை.
தொடர்ந்து அவர்களை தேடிப் பார்த்தபோது வீட்டுக் கிணற்றில் பாமா, சிவானந்த், அஷ்வந்த் ஆகியோரின் உடல்கள் கிடந்தன. இதுகுறித்து அறிந்ததும் வளபட்டணம் போலீசார் விரைந்து சென்று 3 உடல்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கண்ணூர் பரியாரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் கூறுகையில், வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த தன்னுடைய 2 மகன்களையும் கிணற்றில் வீசிய பின்னர் பாமா கிணற்றில் குதித்து தற்கொலை செய்து இருக்கலாம் என்றனர். இந்த சம்பவம் குறித்து வளபட்டணம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
The post கேரளாவில் 2 மகன்களை கொன்று பெண் தற்கொலை appeared first on Dinakaran.