திருவனந்தபுரம்: கடந்த சில வாரங்களுக்கு முன் கேரள கவர்னர் மாளிகையில் உலக சுற்றுச்சூழல் தின விழா நடைபெற்றது. இந்த விழாவில் கேரள விவசாயத்துறை அமைச்சர் பிரசாத் கலந்து கொள்வார் என அறிவிக்கப்பட்டிருந்தது. அப்போது விழா மேடையில் ஆர்எஸ்எஸ் பயன்படுத்தும் பாரதமாதா படம் வைக்கப்பட்டிருந்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அந்த நிகழ்ச்சி கவர்னர் மாளிகையில் இருந்து மாற்றப்பட்டு திருவனந்தபுரம் தலைமைச் செயலகத்தில் நடத்தப்பட்டது . இந்நிலையில் நேற்று கவர்னர் மாளிகையில் சாரணிய மாணவர்களுக்கான விருதுகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
கவர்னர் ராஜேந்திர விஸ்வநாத் ஆர்லேக்கர், கேரள கல்வித் துறை அமைச்சர் சிவன்குட்டி மற்றும் பலர் இந்த விழாவில் கலந்து கொள்வார்கள் என அறிவிக்கப்பட்டிருந்தது. இதன்படி நேற்று விழா தொடங்கியது. இந்த விழாவிலும் ஆர்எஸ்எஸ் பயன்படுத்தும் காவிக்கொடி ஏந்திய பாரதமாதா படம் வைக்கப்பட்டிருந்தது. அந்தப் படத்திற்கு கவர்னர் ராஜேந்திர விஸ்வநாத் ஆர்லேக்கர் மரியாதை செலுத்தினார். அதன் பின்னர் அமைச்சர் சிவன்குட்டி பேசும்போது, அரசு நிகழ்ச்சியில் ஆர்எஸ்எஸ் அமைப்பு பயன்படுத்தும் பாரதமாதா படம் வைக்கப்பட்டுள்ளதை ஏற்றுக்கொள்ள முடியாது. எனவே நான் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள விரும்பவில்லை என்று கூறி அங்கிருந்து வெளியேறினார்.
The post கேரள கவர்னர் மாளிகையில் நடந்த அரசு நிகழ்ச்சியில் மீண்டும் ஆர்எஸ்எஸ்சின் பாரத மாதா படம்: அமைச்சர் புறக்கணித்து வெளியேறினார் appeared first on Dinakaran.