மும்பை: கேரள காங்கிரசின் சர்ச்சை பதிவு விவகாரத்தின் எதிரொலியாக ரசிகர் ஒருவரின் கேள்விக்கு, ‘ராகுல்காந்தியை நிம்மதியாக வாழ விடுங்கள்’ என்று நடிகை ப்ரீத்தி ஜிந்தா ஆவேச பதிவிட்டுள்ளார். கேரளா மாநில காங்கிரஸ் தமது சமூக வலைதளப் பக்கத்தில் சமீபத்தில் வெளியிட்டிருந்த பதிவு ஒன்றில், ‘கடந்த வாரம் வங்கி ஒன்று திவாலான நிலையில், பாலிவுட் நடிகை தனது சமூக வலைதளப் பக்கத்தை பாஜக வசம் ஒப்படைத்துவிட்டு ரூ.18 கோடி கடன் தள்ளுபடி பெற்றுவிட்டார். வங்கியில் பணம் போட்டவர்கள் தங்களின் பணத்துக்காக வீதிகளில் இறங்கிப் போராடுகின்றனர்’ என்று தெரிவித்து நடிகை ப்ரீத்தி ஜிந்தா குறித்த செய்தியைப் பகிர்ந்திருந்தது.
கேரள காங்கிரசின் இந்தக் குற்றச்சாட்டுக்கு உடனடியாக ப்ரீத்தி ஜிந்தா அளித்த பதில், ‘என்னுடைய சமூக வலைதளப் பக்கத்தை நான்தான் கையாளுகிறேன். நீங்கள் இவ்வாறு போலிச் செய்திகளைப் பரப்புவது குறித்து நான் வெட்கப்படுகிறேன். யாரும் எனக்காக எந்தக் கடனையும் தள்ளுபடி செய்யவில்லை, வேறு எதுவும் செய்யவில்லை. ஓர் அரசியல் கட்சி அல்லது அவர்களின் பிரதிநிதிகள் இவ்வாறு போலிச் செய்திகள், மூன்றாம் தர கிசுகிசுக்களை பரப்புவது மிகவும் அதிர்ச்சி அளிக்கிறது.
நீங்கள் குறிப்பிடும் அந்தக் கடன் 10 வருடங்களுக்கு முன்பே முழுமையாக திருப்பிச் செலுத்தப்பட்டுவிட்டது. இந்த விளக்கம் எதிர்காலத்தில் தவறான செய்திகள் பரவுவதை தடுக்கும் என நம்புகிறேன்’ என்று தெரிவித்திருந்தார். சமீபத்தில் கும்பமேளா ப்ரீத்தி ஜிந்தா புனித நீராடினால், அவர் பாஜக ஆதரவாளர் என்ற கருத்தும் சமூக வலைதளங்களில் பகிரப்பட்டது. அதன் தொடர்ச்சியாகவே கேரள காங்கிரஸ் ப்ரீத்தி ஜிந்தா குறித்து சர்ச்சை கருத்தை பதிவிட்டிருந்தது. இந்நிலையில் ப்ரீத்தி ஜிந்தாவிடம் அவரது சமூக வலைதள பக்கத்தில் அவரது ரசிகர் ஒருவர், ‘உங்கள் மீது அவதூறு பரப்பிய கேரள காங்கிரஸ், அக்கட்சியின் மூத்த தலைவர் ராகுல் காந்தி மீது வழக்குத் தொடர திட்டமிட்டுள்ளீர்களா?’ என்று கேட்டார்.
இந்தக் கேள்விக்கு பதிலளித்த ப்ரீத்தி ஜிந்தா, ‘அப்படி யாரையும் இழிவுபடுத்தும் எண்ணம் எனக்கில்லை. ஏனென்றால் மற்றொருவர் செய்யும் செயலுக்கு அவர் (ராகுல்) எப்படி பொறுப்பாவார். பிரச்னைகளை நேரடியாக எதிர்கொள்வதில் நம்பிக்கை கொண்டுள்ளேன்; மறைமுகப் போர்கள் பிரச்னைகளை எதிர் கொள்பவர் நான் அல்ல. ராகுல் காந்தியுடனும் எனக்கு எந்தப் பிரச்னையும் இல்லை; எனவே அவரை நிம்மதியாக வாழ விடுங்கள்; நானும் நிம்மதியாக வாழ்கிறேன்’ என்று பதிலளித்துள்ளார். இவரது பதிலும் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.
The post கேரள காங்கிரசின் சர்ச்சை பதிவு விவகாரம்: ராகுல்காந்தியை நிம்மதியாக வாழ விடுங்கள்! நடிகை ப்ரீத்தி ஜிந்தா ஆவேசம் appeared first on Dinakaran.