திருவனந்தபுரம்: கேரள மாநில பாஜ தலைவராக கடந்த 2020ம் ஆண்டு சுரேந்திரன் பொறுப்பேற்றார். அவரது பதவிக்காலம் நிறைவடைந்ததைத் தொடர்ந்து புதிய தலைவரை தேர்வு செய்ய தீர்மானிக்கப்பட்டது. புதிய தலைவர் பதவிக்கு மூத்த தலைவர்களான ஷோபா சுரேந்திரன், எம்.டி. ரமேஷ் உள்பட பலரது பெயர்கள் அடிபட்டன. ஆனால் பாஜ மேலிடத்தின் சார்பில் முன்னாள் ஒன்றிய இணையமைச்சரான ராஜீவ் சந்திரசேகரின் பெயர் சிபாரிசு செய்யப்பட்டது. தொடர்ந்து நேற்று திருவனந்தபுரத்தில் பாஜ மையக்குழு கூட்டம் நடந்தது. இதில் புதிய தலைவராக ராஜீவ் சந்திரசேகரின் பெயர் சிபாரிசு செய்யப்பட்டது.
அதைத்தொடர்ந்து புதிய தலைவருக்கான வேட்பு மனு தாக்கல் நடந்தது. இதில் ராஜீவ் சந்திரசேகர் மட்டுமே வேட்பு மனு தாக்கல் செய்தார். இதையடுத்து அவர் புதிய தலைவராவது உறுதி செய்யப்பட்டது. இன்று நடந்த பாஜ மாநில கவுன்சில் கூட்டத்தில் ராஜீவ் சந்திரசேகரின் பெயர் முறைப்படி அறிவிக்கப்பட்டது. அதன் பிறகு அவர் புதிய தலைவராக பொறுப்பேற்றுக் கொண்டார். கடந்த மோடி அமைச்சரவையில் இணையமைச்சராக இருந்த ராஜீவ் சந்திரசேகர் கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் திருவனந்தபுரம் தொகுதியில் போட்டியிட்டு காங்கிரஸ் வேட்பாளர் சசி தரூரிடம் தோல்வியடைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
The post கேரள மாநில பாஜ தலைவரானார் முன்னாள் ஒன்றிய அமைச்சர் appeared first on Dinakaran.