சென்னை: கே.வி. பள்ளிகள் மூலம் எந்த தாய்மொழியைக் காப்பாற்றுகிறீர்கள்? அல்லது கற்றுக் கொடுக்கிறீர்கள்? கனிமொழி எம்.பி. கேள்வி எழுப்பியுள்ளார். திமுக நாடாளுமன்றக் குழு தலைவர் கனிமொழி எழுப்பிய கேள்விக்கு மக்களவையில் ஒன்றிய பாஜக அரசு பதிலளித்திருந்தது. இந்நிலையில் இது குறித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள திமுக எம்.பி.கனிமொழி; தமிழ்நாட்டில் உள்ள கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் தமிழ் கற்பிக்க நியமிக்கப்பட்டுள்ள நிரந்தர ஆசிரியர்களின் எண்ணிக்கை என்ன என்ற கேள்விக்கு ஒன்றிய அரசு அளித்துள்ள பதில் “0”. ஆனால், இந்தி கற்பிக்க 86 ஆசிரியர்களும், சமஸ்கிருதம் கற்பிக்க 65 ஆசிரியர்களும் இருப்பதாகக் கூறுகிறது ஒன்றிய பாஜக அரசு.
அரசியலமைப்பு சட்டத்தில் இந்தியோ அல்லது சமஸ்கிருதமோ தேசிய மொழி என்று வரையறுக்கப்பட்டுள்ளதா? அல்லது பாஜக கட்டமைக்க விரும்பும் தேசியம் என்பது அதுதானா? கேந்திரிய வித்யாலயா பள்ளிகளின் வழியாக எந்த தாய்மொழியைக் காக்கிறீர்கள் அல்லது கற்றுக்கொடுக்கிறீர்கள்? மும்மொழிக் கொள்கை என்ற போர்வையில் இப்படி இந்தியையும், சமஸ்கிருதத்தையும் திணிப்பதைத்தான் காலம் காலமாகத் திராவிட முன்னேற்றக் கழகம் எதிர்க்கிறது என்று கூறினார்.
The post கே.வி. பள்ளிகள் மூலம் எந்த தாய்மொழியைக் காப்பாற்றுகிறீர்கள்? அல்லது கற்றுக் கொடுக்கிறீர்கள்? கனிமொழி எம்.பி. கேள்வி appeared first on Dinakaran.