புதுடெல்லி: சர்ச்சைக்குரிய சாமியார் நித்யானந்தா மீது பல்வேறு வழக்குகள் நிலுவையில் இருக்கும் நிலையில், அவர் ஈக்வடார் நாட்டில் தீவு ஒன்றை விலைக்கு வாங்கியுள்ளதாக கூறப்படுகிறது. அந்த தீவிற்கு ‘கைலாசா’ என்ற பெயரிட்டு, தனி ராஜ்யம் நடத்தி வருகிறார். தென் அமெரிக்க நாடான பொலிவியாவில், அமேசான் காட்டில் பழங்குடி மக்கள் வசிக்கும் பகுதியில் அமைந்துள்ள 10 லட்சம் ஏக்கர் பரப்பளவு நிலத்தை நிலத்தை அபகரிக்க நித்யானந்தா முயன்றுள்ளார். தனது சீடர்களை அனுப்பி அந்த பகுதியை சேர்ந்த பழங்குடியின மக்களுடன் ஒப்பந்தம் செய்து, அந்த பகுதியை ‘கைலாசா’ தீவின் மற்றொரு பிரிவாக அறிவிக்க முயன்றுள்ளனர். இந்த நிலம் 1,000 வருட காலத்திற்கு குத்தகைக்கு விடப்பட்டது. இந்த நிலத்தின் குத்தகை தொகை ஆண்டுக்கு ரூ.92 லட்சம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. விதிமுறைகளை மீறி சொத்துகள் பதிவு செய்யப்பட்ட விவகாரம் பொலிவியா நாட்டு அரசுக்கு தெரியவந்தது. அதையடுத்து இந்த சட்டவிரோத பரிவர்த்தனையை மேற்கொண்ட 20 நித்யானந்த பக்தர்களை பொலிவியாவில் இருந்து வெளியேற்றி உள்ளது.
இதுபற்றி பொலிவியாவில் உள்ள குடியேற்றத்துறை இயக்குனர் கேத்தரின் கால்டெரோன் கூறுகையில்,’நித்யானந்தா சீடர்கள், பொலிவியா நாட்டிற்கு வந்து, பொலிவியா பழங்குடியின மக்களின் நல்லெண்ணத்தை மீறுவதோடு, அவர்களின் உரிமைகளையும் மீற முயன்றனர். இதனால் கைலாசா என்ற கற்பனையான நாட்டை சேர்ந்த 20 உறுப்பினர்கள் நாடு கடத்தப்பட்டுள்ளனர். அவர்கள் பொலிவியாவில் உள்ள பழங்குடியின சமூகத்திற்கு சொந்தமான நிலத்தை அபகரிக்க முயன்றனர். கடந்த ஆண்டு நவம்பரில் வந்த சிலர் சுற்றுலாப் பயணிகளாக பொலிவியாவிற்குள் நுழைந்தனர். மீதம் உள்ளவர்கள் ஜனவரி மாதம் வந்தனர். அவர் பழங்குடி மக்களை மிரட்டி ஒப்பந்தம் செய்ததால் கடந்த மார்ச் 16ம் தேதி நாடு கடத்தப்பட்டனர்’ என்றார்.
பொலிவியா அரசாங்கத்தின் அமைச்சர் எட்வர்டோ டெல் காஸ்டிலோ டெல் கார்பியோ கூறுகையில்,’ பொலிவியாவில் உள்ள பூர்வீக சமூகங்களான பாயர், கயூபா, எசி இஹா ஆகிய பழங்குடி இன மக்களுடன் 1,000 ஆண்டுகளுக்கு நித்யானந்தா குழுவினர் 10 லட்சம் ஏக்கர் நிலத்தை குத்தகைக்கு எடுத்தனர். இந்த பகுதி நிலத்தில் உள்ள வளங்களுக்கு அனைத்து உரிமைகளையும் கைலாசா கொண்டு இருக்கும். மேலும் இந்த 10 லட்சம் ஏக்கர் பகுதியும் முழு சுயாட்சிக்கு உத்தரவாதம் அளிக்கப்படும். இதுபற்றி அறிந்ததும் பொலிவிய அரசாங்கமும், பொலிவியாவின் பழங்குடி மக்களின் கூட்டமைப்பும் இந்த ஒப்பந்தம் செல்லாது என்றும், பழங்குடி மக்களுக்கு ஒரு கற்பனையான நாட்டுடன் வர்த்தகம் செய்ய உரிமை இல்லை என்றும் தெரிவித்துள்ளது. மேலும் கைலாசாவை சேர்ந்த 20 பேரும் நாடு கடத்தப்பட்டனர்’ என்றார். தற்போதைய சட்டத்தின்படி வெளிநாட்டினர் அமேசான் பகுதியில் நிலம் வாங்க முடியாது என்று பொலிவியா நாட்டின் அமைச்சர் யாமில் எலோன்ஸ் கூறினார்.
* மும்பையை விட 6.5 மடங்கு பெரியது
பொலிவியாவில் நித்யானந்தா வாங்கிய நிலத்தின் அளவு டெல்லியை விட 2.6 மடங்கும், மும்பையை விட 6.5 மடங்கும், பெங்களூருவை விட 5.3 மடங்கும், கொல்கத்தாவை விட 19 மடங்கும் பெரியது என்று தகவல் வெளியாகி உள்ளது.
The post ‘கைலாசா’ தீவில் இருந்து கொண்டு அடுத்த கைவரிசை 10 லட்சம் ஏக்கர் அமேசான் காடுகளை 1000 ஆண்டுக்கு குத்தகைக்கு எடுத்த நித்யானந்தா: பத்திரப்பதிவை ரத்து செய்து பொலிவியா அரசு அதிரடி appeared first on Dinakaran.