திருவனந்தபுரம்: மலையாள சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவர் விநாயகன். இவர் தமிழ், தெலுங்கு உள்பட பல்வேறு மொழிகளிலும் நடித்துள்ளார். அடிக்கடி ஏதாவது சர்ச்சைகளில் சிக்குவது இவரது வழக்கம். கடந்த சில வருடங்களுக்கு முன் கேரள முன்னாள் முதல்வர் உம்மன் சாண்டி குறித்து அவதூறாக பேசியது தொடர்பாக இவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. கடந்த சில மாதங்களுக்கு முன் ஹைதராபாத் விமான நிலையத்தில் விமான நிறுவன ஊழியர்களிடம் இவர் தகராறில் ஈடுபட்டார். இதையடுத்து போலீசார் இவரை கைது செய்தனர். சமீபத்தில் கோவாவில் வைத்து ஒரு டீக்கடை முன் குடிபோதையில் இவர் தகராறு செய்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது. இவர் கொச்சி கலூரில் ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருகிறார்.
இந்நிலையில் நடிகர் விநாயகன் இந்த அடுக்குமாடி குடியிருப்பின் பால்கனியில் நின்று கொண்டு நிர்வாண போஸ் கொடுத்து ஆபாசமாகத் திட்டும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. இந்தக் காட்சியை பக்கத்து குடியிருப்பைச் சேர்ந்த யாரோ செல்போனில் எடுத்து சமூக சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ளனர். நடிகர் விநாயகனின் இந்த செயலுக்கு பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்த சம்பவம் தொடர்பாக இதுவரை யாரும் புகார் செய்யவில்லை என்றும், புகார் செய்தால் நடிகர் விநாயகன் மீது வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று கொச்சி போலீசார் தெரிவித்தனர்.
The post கொச்சி அடுக்குமாடி குடியிருப்பில் பிரபல நடிகர் விநாயகன் நிர்வாண போஸ்: சமூக வலைதளங்களில் கடும் கண்டனம் appeared first on Dinakaran.