திருவனந்தபுரம்: கடந்த இரு தினங்களுக்கு முன் திருவனந்தபுரம் அருகே உள்ள விழிஞ்ஞத்திலிருந்து கொச்சிக்கு லைபீரியா நாட்டு சரக்கு கப்பல் ஒன்று புறப்பட்டு சென்றது. இதில் 640 கண்டெய்னர்கள் இருந்தன. இவற்றில் 13 கண்டெய்னர்களில் ஆபத்தான அமிலப்பொருட்களும், 12 கண்டெய்னர்களில் கால்சியம் கார்பைடும் இருந்தன. இந்நிலையில் நேற்று முன்தினம் மதியம் இந்த சரக்கு கப்பல் கொச்சியில் இருந்து 74 கிமீ தொலைவில் அரபிக்கடலில் திடீரென மூழ்கத் தொடங்கியது. இதுகுறித்து அறிந்ததும் கடலோர காவல்படையும், இந்திய கடற்படையும் அங்கு விரைந்தன. கப்பல் மூழ்கத் தொடங்கிய உடனேயே ஆபத்தான அமிலப் பொருட்கள் அடங்கிய கண்டெய்னர்கள் கடலில் விழுந்தன. இவை மனிதர்களுக்கு ஆபத்தை ஏற்படுத்தும் என்பதால் இந்த கண்டெய்னர்கள் கரையில் ஒதுங்கினால் யாரும் தொடக்கூடாது என்று கடலோரக் காவல்படை எச்சரித்தது.
இந்தக் கப்பலில் கேப்டன் உள்பட 24 ஊழியர்கள் இருந்தனர். அவர்களை கடலோர காவல்படை பத்திரமாக மீட்டது.
இதற்கிடையே இந்த சரக்கு கப்பல் நேற்று முற்றிலுமாக கடலில் மூழ்கியது. இதனால் இதிலிருந்த அனைத்து கண்டெய்னர்களும் கடலில் விழுந்தன. மூழ்கிய கப்பலில் 84.44 மெட்ரிக் டன் டீசலும், 367.1 மெட்ரிக் டன் பர்னஸ் ஆயிலும் உள்ளன. இவை கடலில் கலக்க வாய்ப்பு உள்ளது என்பதால் மாசுபாட்டை தடுக்க தேவையான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் கடலோரக் காவல்படை மேற்கொண்டு வருகிறது. இதுவரை கடலில் எண்ணெய் கசிவு ஏற்பட்டதற்கான எந்தத் தகவலும் இல்லை.எண்ணெய் கசிவை கண்டறியும் அதிநவீன உபகரணங்களுடன் கூடிய இந்திய கடலோர காவல்படை(ஐசிஜி) விமானங்கள் வான்வழி கண்காணிப்பை மேற்கொண்டு வருகின்றன.
The post கொச்சி அருகே ஆபத்தான அமிலப் பொருட்கள் அடங்கிய 640 கண்டெய்னர்களுடன் சரக்கு கப்பல் மூழ்கியது: 24 ஊழியர்கள் மீட்பு appeared first on Dinakaran.