கொல்கத்தா: கொல்கத்தா பல்கலை வளாகத்தில் சர்ச்சைக்குரிய வாசகங்கள் எழுதப்பட்ட விவகாரம் தொடர்பாக சம்பந்தப்பட்ட கூட்டமைப்பினர் மீது வழக்கு பதியப்பட்டுள்ளது. மேற்குவங்க மாநிலம் கொல்கத்தாவில் உள்ள ஜாதவ்பூர் பல்கலைக்கழக சுவர்களில் ‘ஆசாத் காஷ்மீர்’ மற்றும் பாலஸ்தீனத்தை ஆதரிக்கும் வாசகங்கள் எழுதப்பட்டிருந்தன.
பல்கலைக்கழகத்தின் 3வது கேட் அருகே உள்ள சுவரில் வரையப்பட்ட மேற்கண்ட வாசகங்கள் எழுதப்பட்டிருந்தன. இந்த வாசகங்களை எழுதிவைத்த நபர்களை அடையாளம் காணும் வகையில், அப்பகுதியில் இருக்கும் சிசிடிவி காட்சிகள் மற்றும் பிற ஆதாரங்களை போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர்.
இதுகுறித்து போலீஸ் அதிகாரிகள் கூறுகையில், ‘ஜாதவ்பூர் பல்கலைக்கழகத்தில் நீண்டகாலமாக மாணவர் சங்கத் தேர்தல் நடத்தப்படாமல் உள்ளது. இந்த தேர்தலை நடத்தக் கோரி நடைபெற்ற போராட்டங்களின் போது, சிலர் ‘ஆசாத் காஷ்மீர்’ மற்றும் பாலஸ்தீனத்தை ஆதரிக்கும் வாசகங்கள் எழுதி வைத்துள்ளனர். கடந்த 1ம் தேதி மேற்குவங்க கல்வி அமைச்சர் பிரத்யா பாசு, நிகழ்வு ஒன்றில் கலந்து கொள்ள பல்கலைக்கழக வளாகத்திற்குச் சென்றபோது இதுபோன்ற வாசகங்கள் எழுதப்பட்டிருந்தன.
புகாரின் அடிப்படையில் இடதுசாரி மாணவர் அமைப்பான முற்போக்கு ஜனநாயக மாணவர் கூட்டமைப்பினர் மீது எப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது. ஜாதவ்பூர் பல்கலைக்கழக திரிணாமுல் சத்ரா பரிஷத் அமைப்பு, இந்த சம்பவம் குறித்து கடும் கவலை தெரிவித்ததுடன், பல்கலைக்கழகத்தை தேச விரோத நடவடிக்கைகளுக்கான மையமாக மாறுவதைத் தடுக்க கடுமையான நடவடிக்கை எடுக்கக் கோரியுள்ளது.
The post கொல்கத்தா பல்கலை வளாகத்தில் சர்ச்சை வாசகங்கள்: கூட்டமைப்பினர் மீது வழக்கு appeared first on Dinakaran.