மாற்றுத்திறனாளிகளுக்கான உதவித் தொகையை உயர்த்தி வழங்குவது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, சென்னையில் கோட்டையை நோக்கி முற்றுகை போராட்டத்தில் ஈடுபட முயன்ற மாற்றுத் திறனாளிகளை போலீஸார் கைது செய்தனர். முன்னதாக, போராட்டத்தில் ஈடுபட பல்வேறு இடங்களில் இருந்து சென்னைக்கு வந்த 5,000-க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகளை ஆங்காங்கே தடுத்து நிறுத்தி போலீஸார் கைது செய்தனர்.
ஆந்திரா மாநிலத்தைப்போல தமிழகத்திலும் உதவித்தொகையை குறைந்தபட்சம் ரூ.6,000 ஆக உயர்த்தி வழங்க வேண்டும்; மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு தொடர்ந்து 100 நாட்கள் வேலை வழங்குவதுடன், 4 மணி நேரம் மட்டுமே வேலை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, சென்னை எழிலகத்தில் இருந்து கோட்டையை நோக்கி முற்றுகை போராட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெறும் என்று தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் தரப்பில் அறிவிக்கப்பட்டது.