அறிவியல், ஆரோக்கியம், இந்தியா, சட்டம், சுற்றுப்புறம், மருத்துவம்

சிகரெட்டின் தீமைகளிலிருந்து மக்களை காப்பாற்ற – தடைதான் ஒரே வழி!

சிகரெட் விற்பனையைக் கட்டுப்படுத்த சில்லறை விற்பனை செய்யப்படும் நடைமுறைக்குத் தடை செய்யலாம் என மத்திய அரசுக்கு நிபுணர் குழு பரிந்துரை செய்துள்ளது. இந்தப் பரிந்துரையை மத்திய அரசும் நடைமுறைப்படுத்துவது குறித்து ஆலோசித்து வருகிறது. அபராதத்தைக்கூட ரூ.200-லிருந்து ரூ.20,000-ஆகவும், சிகரெட் வாங்குவோரின் வயது 18-க்குப் பதிலாக 25-ஆக உயர்த்தப்பட வேண்டும் என்றும் இந்த நிபுணர் குழு பரிந்துரை செய்துள்ளது.

affected lungs of smokingஏற்கெனவே, புகைப்பது உடல் நலத்துக்கு கேடு என்று சிகரெட் பெட்டிகளில் அச்சிடுகிறார்கள். இப்போது அபாயம் என்ற மண்டையோடு பெரிதாக அச்சிடும் நடைமுறையைக் கொண்டு வந்திருக்கிறார்கள். திரைப்படங்களில் சிகரெட் பிடிக்கும் காட்சி இடம் பெறும்போது எச்சரிக்கை வரிகள் இடம்பெறுகின்றன. இப்போது சில்லறை விற்பனையைத் தடை செய்ய சிந்திக்கிறார்கள். அபராதத்தை உயர்த்தவிருக்கிறார்கள்.

டாஸ்மாக் மதுக்கடையில் சில்லறை விற்பனைக்கு அனுமதி கிடையாது. ஆனாலும், டாஸ்மாக் கடைகள் பலவற்றிலும், சிறு அளவுகளில் (கட்டிங்) விற்பனை செய்யும் நடைமுறை இருக்கவே செய்கிறது. இதேபோன்ற நடைமுறைதான் சிகரெட் விற்பனையிலும் நடக்கப்போகிறது. இந்த வணிகத்தை சுகாதார அதிகாரிகள் எப்படிக் கட்டுப்படுத்தப் போகிறார்கள்? அது சாத்தியம்தானா? பொதுஇடத்தில் சிகரெட் குடித்தால் ரூ.200 அபராதம் என்று உள்ளது. இதன்படி இந்தியாவில் எத்தனை பேரிடம் எத்தனை லட்சம் ரூபாய் அபராதம் வசூலிக்கப்பட்டது? அதுபோலத்தான் இதுவும்.

ஒவ்வொரு சிகரெட்டாக வாங்கிக் குடிப்பவர், ஒரு பாக்கெட் தன் கையில் இருக்கும்போது, அடிக்கடி புகைபிடிப்பவராக மாறிவிடும் அபாயம் இருக்கத்தான் செய்கிறது. ஆனால், சிகரெட் விற்பனையில் 70% சில்லறை வியாபாரம் என்பதால், இந்தச் சட்டம் நடைமுறைக்கு வந்தால் 20% விற்பனை குறையக் கூடும்.

மேலும், உயர் வகுப்புக்களுக்குச் செல்லும் மாணவர்கள், தாங்களும் இளைஞர்களாகி விட்டதைக் காட்டுவதற்காக ஒரு சிகரெட்டைப் பற்ற வைத்து புகையை ஊதி மகிழ்வதில் தொடங்கி, அதுவே உள்ளே இழுத்துப் பழகிக் கொள்வதில் முடிகிறது. சில்லறை விற்பனை நிஜமாகவே தடை செய்யப்பட்டால், புகைப்பழக்கத்துக்கு அடிமையாகிறவர்களின் எண்ணிக்கை பாதியாகக் குறையக்கூடும்.

சிகரெட் புகையிலை ஆகியவை உடல் நலத்துக்கு தீங்கு விளைவிக்கின்றன என்பது மிகத் தெளிவு. அப்படியானால், அதை முற்றிலும் தடை செய்வது மட்டுமே சிறந்த நடைமுறையாக இருக்க முடியும். சில்லறை விற்பனையைத் தடுப்பது, அபராதத்தை பல மடங்கு உயர்த்துவது ஆகியவற்றால் முறைகேடுகளை மட்டுமே மேலும் மேலும் அதிகரிக்க நேரிடும்.effects-of-smoking

இறப்புக்கு காரணமாகும் நோய்களில் மதுவும் புகையிலையும்தான் இன்று முன்னிலையில் இருக்கின்றன. ஆண்டுதோறும் இந்தியாவில் மதுவால் 25 லட்சம் உயிர்கள் பலியாகின்றன என்றால் புகையிலைப் பழக்கத்தால் ஏற்படும் புற்றுநோய், காசநோய் போன்றவற்றால் மரணமடைபவர்கள் 15 லட்சம் பேர். மதுவிலக்கு நடைமுறைப்படுத்தப்பட்டால், அதன் விளைவாகக் கள்ளச்சாராய விற்பனையும், சமூக விரோதிகளின் மாஃபியா ராஜியமும் கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு வளர்ந்துவிடும் என்று கூறப்படுவது போல, புகையிலையைப் பற்றிக் கூற முடியாது. தடையுடன் விழிப்புணர்வையும் ஏற்படுத்தினால் புகையிலைப் பழக்கத்தைக் கணிசமாகக் குறைக்கலாம்.

சிகரெட் புகையிலைப் பழக்கம் காரணமாக ஏற்பட்ட நோய்களுக்கு 2011-ஆம் ஆண்டில் ரூ.1 லட்சம் கோடி செலவிடப்பட்டதாக மாநிலங்களவையில் தெரிவித்திருக்கும் மத்திய சுகாதார அமைச்சர், இந்த சிகரெட் புகையிலை விற்பனை மூலம் அரசுக்கு 25,000 கோடி மட்டுமே வருவாய் கிடைப்பதைத் தெரிவிக்கவில்லை. புகையிலை, சிகரெட் மூலம் அரசுக்கு கிடைக்கும் வருவாய் குறைவாகவும், நோய்களுக்கு செலவிடும் தொகை அதிகமாகவும் இருக்கும் என்றால், இந்தப் புகையிலை, சிகரெட்டை ஏன் முழுமையாகத் தடை செய்யக்கூடாது?

ஒன்று மட்டும் தெரிகிறது. புகையிலை விற்பனை மூலம் வணிகர்கள், உற்பத்தியாளர்களுக்கு மட்டுமே அதிக லாபம் கிடைக்கின்றது. அரசுக்கு நிதி வீணாகிறது. மக்களுக்கு உடல் பாழாகிறது.

இவ்வளவு நடவடிக்கை, எச்சரிக்கை, அபராதம் எல்லாவற்றையும் செய்து அதைக் கண்காணிப்பதைக் காட்டிலும், புகையிலையை ஒட்டுமொத்தமாகத் தடை செய்வதுதான் எளிய வழியாக இருக்க முடியும். உண்மையாகவே புகையிலைப் பழக்கத்தைத் தடுப்பதுதான் நோக்கமாக இருக்குமேயானால், அரசு செய்ய வேண்டியது புகையிலைப் பொருள்கள் அனைத்தையும் – சிகரெட், பீடி, குட்கா, பான்பராக் போன்ற அனைத்து வகையான புகையிலை சார்ந்த பொருள்களுக்கும் தடை விதிக்க வேண்டும்.

-தினமணி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *