திருமலை: கோயிலுக்கு சென்று திரும்பியபோது காரும், அரசு பஸ்சும் மோதிக்கொண்டன. இந்த விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 3பேர் பரிதாபமாக இறந்தனர். தெலங்கானா மாநிலம் மெகபூபாபாத் மாவட்டம் காந்தேயபாலத்தை சேர்ந்தவர் ரவீந்தர்(34), கார் டிரைவர். இவரது மனைவி ரேணுகா(28). இவர்களது மகள் ரிஷிதா(8), மகன் ரிஷிகிருஷ்ணா (6). இந்நிலையில் ரவீந்தர் தனது மனைவி மற்றும் குழந்தைகளுடன் சூர்யாபேட்டை மாவட்டம் ஆத்மகூர் அடுத்த கோட்டா பஹாட் கிராமத்தில் நேற்று நடந்த கோயில் திருவிழாவிற்கு சென்றனர். அங்கு சுவாமி தரிசனம் செய்துவிட்டு நேற்று மாலை உறவினர்களான கருணாகர், அவரது மனைவி புஷ்பா, கந்தம்மது, அவரது மனைவி சாத்விகா, அவர்களது குழந்தைகள் கஞ்சந்தர், மல்லிகார்ஜுன், ஜஸ்வின் உள்பட 11 பேருடன் காரில் ஐதராபாத் புறப்பட்டனர். காரை ரவீந்தர் ஓட்டி சென்றார்.
கார் சூர்யாபேட்டை அருகே உள்ள பிபி குடேம் என்ற பகுதியில் சென்றபோது கம்மம் நோக்கி வந்த அரசு பஸ்சும், காரும் நேருக்கு நேர் மோதிக்கொண்டன. இதில் கார் நொறுங்கியது. காருக்குள் சிக்கியவர்கள் அலறி துடித்தனர். தகவலறிந்து சம்ப இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், பொதுமக்கள் உதவியுடன் விபத்தில் சிக்கி படுகாயம் அடைந்த 4பேரை மீட்டு சூர்யாபேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் ரவீந்தர், ரேணுகா, ரிஷிதா ஆகியோர் உடல் நசுங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டனர். மற்ற 4 பேர் லேசான காயங்களுடன் தப்பினர். அதேபோல் பஸ்சில் இருந்த பயணிகளும் காயமின்றி தப்பினர்.
இயைதடுத்து போலீசார் 3 பேரின் சடலங்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சூர்யாபேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கோயிலுக்கு சென்று திரும்பியபோது விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 3பேர் பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
The post கோயிலுக்கு சென்று திரும்பியபோது விபத்து: ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் பலி appeared first on Dinakaran.