மும்பை: கோர்ட்டில் ஆஜராகாமல் 40 வாய்தாக்கள் வாங்கிய நடிகையும், பாஜக எம்பியுமான கங்கனாவுக்கு ‘லாஸ்ட் சான்ஸ்’ கொடுக்கப்பட்டுள்ளது. அதேநேரம் அவருக்கு எதிராக கைது வாரண்ட் பிறப்பிக்க பாடலாசிரியர் மனு தாக்கல் செய்துள்ளார். பாலிவுட் நடிகையும், பாஜக எம்பியுமான கங்கனா ரணாவத் – பாலிவுட் பாடலாசிரியர் ஜாவேத் அக்தர் இடையேயான சட்டப் போராராட்டம் கடந்த 2016ம் ஆண்டில் இருந்து பல்வேறு நீதிமன்றங்களில் நடந்து வருகிறது.
ஒருவரை ஒருவர் கடுமையாக விமர்சித்துக் கொண்டதால், இருவர் தரப்பிலும் அவதூறு வழக்குகள் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. இருவரும் கடந்தாண்டு டிசம்பரில் நீதிமன்ற வழக்குகள் உள்ளிட்ட பிரச்னைகள் தொடர்பாக மத்தியஸ்தம் செய்து கொள்ள முடிவு செய்தனர். இருப்பினும், அவர்களுக்கு இடையிலான மத்தியஸ்தம் நடக்கவில்லை. பாந்த்ரா நீதிமன்றத்தில் இருவரும் ஆஜராகி, தங்களது வழக்குகளை முடித்துக் கொள்வது தொடர்பாக சமரச மனுக்கள் தாக்கல் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. நேற்றைய விசாரணையின் போது மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் ஜாவேத் அக்தர் ஆஜரானார். ஆனால் கங்கனா நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை. அவர் நேற்றைய நாடாளுமன்ற கூட்டத் தொடரில் கலந்து கொண்டதால் நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை என்று கூறப்படுகிறது.
இந்த நிலையில் கங்கனாவுக்கு எதிராக ஜாமீனில் வெளிவர முடியாத வாரண்ட் பிறப்பிப்பதற்கு முன்பு அவருக்கு கடைசி வாய்ப்பை நீதிமன்றம் வழங்கியது. முன்னதாக ஜாவேத் அக்தர் சார்பாக ஆஜரான வழக்கறிஞர், ‘கங்கனா நீதிமன்றத்தில் ஆஜராக இருப்பதை உறுதி செய்யும் வகையில், அவருக்கு ஜாமீனில் வெளிவர முடியாத வாரண்ட் பிறப்பிக்க வேண்டும்’ என்று ஒரு மனுதாக்கல் செய்தார். அதையடுத்து கங்கனா நீதிமன்றத்தில் ஆஜராவதற்கு கடைசி வாய்ப்பு வழங்கப்பட்டு, வழக்கை நீதிமன்றம் ஒத்திவைத்தது. மேற்கண்ட வழக்கு நீதிமன்றத்தில் தாக்கலாகி இதுவரை கிட்டத்தட்ட 40 முக்கிய தேதிகளில் கங்கனா ஆஜராகவில்லை. மாறாக அவரது தரப்பில் பல்வேறு காரணங்களை கூறி வாய்தா வாங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
The post கோர்ட்டில் ஆஜராகாமல் 40 வாய்தாக்கள் வாங்கிய பாஜக எம்பி கங்கனாவுக்கு ‘லாஸ்ட் சான்ஸ்’: கைது வாரண்ட் பிறப்பிக்க பாடலாசிரியர் மனு appeared first on Dinakaran.