கோவை: கோவையில் ரூ.9.67 கோடி மதிப்பில் சர்வதேச ஹாக்கி மைதானத்துக்கு துணை முதல்வர் உதயநிதி அடிக்கல் நாட்டில் ரூ.239.41 கோடியில் 25,024 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கினார்.
கோவை ஆர்.எஸ்.புரம் மாநகராட்சி மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் ரூ.9.67 கோடி மதிப்பீட்டில் சர்வதேச அளவிலான ஹாக்கி மைதான அடிக்கல் நாட்டு விழா, ரூ.29.99 கோடி மதிப்பிலான 54 திட்டப்பணிகள் துவக்க விழா, ரூ.82.14 கோடி மதிப்பீட்டில் 132 திட்டப்பணிகளுக்கான அடிக்கல் நாட்டு விழா, 25,024 பயனாளிகளுக்கு ரூ.239.41 கோடி மதிப்பிலான நலத்திட்டங்கள் வழங்கும் விழா நேற்று நடந்தது.
இதில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு ஹாக்கி மைதானத்துக்கு அடிக்கல் நாட்டி பணிகளை துவக்கி வைத்து நலத்திட்ட உதவிகள் வழங்கி பேசியதாவது:
எல்லாருக்கும் எல்லாம் என்ற நோக்கத்தில் இந்த திராவிட மாடல் அரசு செயல்பட்டு வருகிறது. மாணவர்கள், தொழிற்துறையினர், மகளிர் குழுவினர், மாற்றுத்திறனாளிகள், தாய்மார்கள் அதிகமாக இங்கே வந்திருக்கிறார்கள். அனைத்து தரப்பு மக்களுக்கும் இந்த திராவிட மாடல் அரசு திட்டங்களை நிறைவேற்றி தருகிறது. சில நாட்களுக்கு முன் ஒ உள்ளாட்சி அமைப்புகளில் நியமன பதவிகளில் மாற்று திறனாளிகளை நியமிக்க சட்ட மசோதா கொண்டு வரப்பட்டது. இதன்மூலமாக 13 ஆயிரம் பேர் பதவிக்கு வரவுள்ளனர். இது இந்தியாவில் வேறு எந்த மாநிலத்திலும் இல்லாத அம்சமாக பார்க்கப்படுகிறது. இப்படி அனைத்து துறைகளிலும் திட்டங்களை சிறப்பாக நிறைவேற்றுவதால்தான் இந்தியாவில் 9.61 சதவீத வளர்ச்சியுடன் தமிழ்நாடு முதலிடத்தில் இருக்கிறது. இவ்வாறு அவர் பேசினார்.
விழாவில் அமைச்சர்கள் செந்தில் பாலாஜி, கயல்விழி செல்வராஜ், எம்.பிக்கள் கணபதி ராஜ்குமார், ஈஸ்வரசாமி, கலெக்டர் பவன்குமார், மாநகராட்சி கமிஷனர் சிவகுரு பிரபாகரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
‘சூழ்ச்சிகளை முறியடிப்பதால் பாஜவும், அதிமுகவும் கதறுகிறார்கள்’
கோவை சிவானந்தா காலனி பகுதியில் திராவிட இயக்கத் தமிழர் பேரவை சார்பில் நடைபெற்ற சுயமரியாதை இயக்க நூற்றாண்டு விழாவின் நிறைவு நாள் பொதுக்கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பேசியதாவது:தமிழ் பண்பாட்டை, கலாசாரத்தை அழிக்க நினைக்கிறார்கள். மாநில உரிமையை பறிக்க முயற்சிக்கிறார்கள். பாசிஸ்ட்களின் சூழ்ச்சிகளை முறியடிப்பதால், அவர்கள் கதறுகிறார்கள். ஆனால் பாஜவோடு சேர்ந்து அதிமுகவும் கதறுகிறார்கள். ஒரேயொரு ரெய்டு நடத்தி அதிமுகவை காப்பாற்ற முடியாமல் பாஜவின் காலடியில் விழுந்து கிடக்கும் எடப்பாடி பழனிசாமியை பார்த்து தமிழ்நாடு மக்கள் அனைவரும் சிரித்து கொண்டிருக்கிறார்கள்.
தமிழ்நாட்டை மட்டுமின்றி ஒட்டுமொத்த இந்தியாவை காப்பாற்ற முதலமைச்சர் பணியாற்றி கொண்டிருக்கிறார். அதனால்தான் இந்தியா முழுவதும் எதிரொலிக்கிறது. அதனால் நமது முதல்வர் பெயரை கேட்டால் பயம் வருகிறது. இந்தியாவில் பாஜவை நேருக்கு நேர் நின்று எதிர்க்கும் ஒரே இயக்கம் திமுகதான். இதனால் நமது கழகத்தை எப்படியாவது வீழ்த்த வேண்டுமென துடித்துக் கொண்டிருக்கிறார்கள்.இது அமித்ஷாவின் வேட்டைக்காடு அல்ல, தமிழ்நாடு என்பதை புரிய வைக்க வேண்டும்.சட்டமன்ற தேர்தலில் 200 க்கும் அதிகமான தொகுதிகளில் திமுக வெற்றி பெறும். இவ்வாறு அவர் கூறினார்.
5 கிலோ மீட்டர் ‘ரோடு ஷோ’
கோவையில் நடைபெற்ற அரசு விழாவில் பங்கேற்பதற்காக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் நேற்று விமானம் மூலம் கோவை வந்தடைந்தார். விமான நிலையத்தில் கட்சி நிர்வாகிகள் வரவேற்பு அளித்தனர். இதன் பின்னர் வேனில் ஏறி ‘ரோடு ஷோ’ சென்றார். விமான நிலையத்தில் இருந்து அவிநாசி சாலையில் 5 கிமீ தூரம் வழிநெடுகிலும் கட்சி தொண்டர்கள், பொதுமக்கள் என ஆயிரக்கணக்கானோர் திரண்டு வந்து உற்சாக வரவேற்பு அளித்ததோடு உதயநிதி ஸ்டாலினுடன் கைகுலுக்கி, புத்தகங்கள் மற்றும் பரிசு பொருட்கள், கோரிக்கை மனுக்களை வழங்கினர்.
The post கோவையில் ரூ.9.67 கோடி மதிப்பில் சர்வதேச ஹாக்கி மைதானத்துக்கு துணை முதல்வர் உதயநிதி அடிக்கல்: ரூ.239.41 கோடியில் 25,024 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கினார் appeared first on Dinakaran.