கோவை : கோவை அருகே மேற்கு தொடர்ச்சி மலையில் உற்பத்தியாகும் சங்கனூர் ஓடை, தடாகம் தொடங்கி, சிங்காநல்லூர் குளம் வரை நீள்கிறது. இந்த ஓடையின் இருபுறமும் உள்ள ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு, மழை வெள்ளம் நேரத்தில் மக்களை பாதுகாக்கும் வகையில் கான்கிரீட் தடுப்பு சுவர் கட்டும் பணி நடந்து வருகிறது. கோவை மாநகராட்சி சார்பில் இப்பணி நடந்து வருகிறது. முதல்கட்டமாக, கோவை-மேட்டுப்பாளையம் சாலையில் உள்ள போலீஸ் சோதனை புறக்காவல் நிலையம் அருகே தொடங்கி, சுமார் 2.3 கிமீ தூரத்துக்கு இப்பணி நடக்கிறது.
கடந்த 21ம் தேதி (திங்கள்) கோவை டாடாபாத் ஹட்கோ காலனி அண்ணாநகர் பகுதியில் ஓடையை தூர்வாரும் பணி நடந்தது. அப்போது, இரவு 9 மணியளவில் கரைப்பகுதில் இருந்த சுரேஷ் என்பவருக்கு சொந்தமான அடுக்குமாடி வீட்டின் அடிப்பகுதியில் மண் அரிப்பு ஏற்பட்டு, வீடு சரிந்து விழுந்தது. இதைத்தொடர்ந்து அருகில் உள்ள தனலட்சுமி, லட்சுமணராஜ் ஆகியோருக்கு சொந்தமான 2 ஓட்டு வீடுகளும் சரிந்து விழுந்தன.
இந்த வீடுகளை மாநகராட்சி கமிஷனர் சிவகுரு பிரபாகரன் உத்தரவின்பேரில், துணை கமிஷனர் சுல்தானா மறுநாள் நேரில் பார்வையிட்டு, ஆய்வு செய்தார். பின்னர், 3 வீடுகளின் உரிமையாளர்களுக்கு மாற்று வீடு வழங்கலாம் என மாநகராட்சி கமிஷனருக்கு பரிந்துரை செய்தார். இதையடுத்து, மாநகராட்சி கமிஷனர் சிவகுரு பிரபாகரன், மாவட்ட கலெக்டர் கிராந்திகுமார் பாடியுடன் கலந்தாய்வு செய்து, தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் சார்பில், மேற்கண்ட 3 குடும்பத்துக்கும் வீடுகள் ஒதுக்கலாம் என பரிந்துரைத்தார்.
இதையடுத்து, கலெக்டர் கிராந்திகுமார் பாடி உத்தரவின்பேரில், தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் சார்பில், அடுத்த 4 நாளில் மேற்கண்ட 3 குடும்பத்துக்கும் வீடுகள் ஒதுக்கீடு செய்யப்பட்டு விட்டது. அதற்கான ஆணை வழங்கும் நிகழ்ச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்தது. ‘சுரேஷ், தனலட்சுமி ஆகிய இரு குடும்பத்துக்கு சித்தாபுதூர் பகுதியில் கட்டப்பட்ட அடுக்குமாடி குடியிருப்பு ஒதுக்கப்பட்டுள்ளது. இதற்கான ஆணையை கலெக்டர் வழங்கினார்.
இதன் மதிப்பு தலா ரூ.13.50 லட்சம் ஆகும். லட்சுமணராஜ் என்பவரது குடும்பத்துக்கு கீரணத்தம் காந்திமாநகரில் அடுக்குமாடி குடியிருப்பு ஒதுக்கப்பட்டுள்ளது. இதன் மதிப்பு ரூ.6.50 லட்சம் ஆகும். இதற்கான ஆணையையும் கலெக்டர் வழங்கினார்.
நிகழ்ச்சிக்கு, கோவை தொகுதி எம்.பி. கணபதி ராஜ்குமார், மேயர் ரங்கநாயகி, மாநகராட்சி கமிஷனர் சிவகுரு பிரபாகரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சியில், மாநகராட்சி துணை கமிஷனர் குமரேசன், மத்திய மண்டல தலைவர் மீனா லோகு, வீட்டு வசதி வாரிய நிர்வாக பொறியாளர் ஜீவானந்தம், வார்டு கவுன்சிலர் கமலாவதி போஸ் உள்பட பலரும் பங்கேற்றனர்.
The post சங்கனூர் ஓடை கரையோரம் 3 வீடுகள் இடிந்து விழுந்த விவகாரம் 3 குடும்பத்துக்கு 4 நாளில் மாற்று வீடுகள் ஒதுக்கீடு appeared first on Dinakaran.