புதுச்சேரி: வீடுர், சாத்தனூர் அணைகள் திறப்பால் சங்கராபரணி, தென்பெண்ணை ஆறுகளில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. இந்த வெள்ள நீர் புதுச்சேரியில் 25-க்கும் மேற்பட்ட கிராமப் பகுதிகளில் புகுந்துள்ளதால் பாதிப்பு அதிகரித்துள்ளது. இப்பகுதிகளை ஆளுநர், முதல்வர், அமைச்சர்கள் நேரில் ஆய்வு செய்தனர். வெள்ளத்தில் சிக்கிய நான்கு போலீஸாரை தேசிய பேரிடர் மீட்புக்குழு மீட்டது.
தமிழக பகுதிகளில் பெய்யும் மழை புதுச்சேரியை வந்தடையும். இந்நிலையில் சாத்தனூர், வீடுர் அணைகள் திறப்பால் தென்பெண்ணை மற்றும் சங்கராபரணி ஆறுகளில் வெள்ளம் கரை புரண்டு ஓடுகிறது. 25-க்கும் மேற்பட்ட கிராமங்கள் கடும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளன. தென் பெண்ணை ஆற்றில் வெள்ளம் அதிகரிப்பால் சித்தேரி அணைக்கட்டு, கொம்மந்தான்மேடு தடுப்பணை, மணமேடு தடுப்பணைகளில் அதிகளவு வெள்ள நீர் செல்கிறது.