ஷீரடி: சட்டமன்ற தேர்தல் முடிவின் மூலம் காட்டிக்கொடுக்கும் அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளதாக கூறி சரத்பவார், உத்தவ் தாக்ரே குறித்து அமித் ஷா காட்டமாக பேசினார். மகாராஷ்டிரா மாநிலம் ஷீரடியில் நடைபெற்ற பாஜக மாநில செயற்குழு கூட்டத்தில் பங்கேற்ற பாஜக மூத்த தலைவரும், ஒன்றிய உள்துறை அமைச்சருமான அமித் ஷா பேசுகையில், ‘நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் வாரிசு அரசியல், காட்டிக் கொடுக்கும் அரசியலை மகாராஷ்டிரா மக்கள் வீழ்த்தி உள்ளனர்.
தேர்தல் முடிவுகள் முன்னாள் முதல்வர் உத்தவ் தாக்கரேவின் இருப்பிடத்தை காட்டியுள்ளது. ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனா தான் உண்மையான சிவசேனா என்று மக்கள் தீர்ப்பளித்துள்ளனர். கடந்த 1978ம் ஆண்டு முதல் மகாராஷ்டிரா மாநிலத்தில் துரோக அரசியலைத் தொடங்கிய தேசியவாத காங்கிரஸ் கட்சியை உருவாக்கிய சரத் பவாரை மக்கள் 20 அடி ஆழத்தில் புதைத்துவிட்டனர். ஒரு காலத்தில் சரத் பவார் முதல்வராக இருந்தார். அப்புறம் கூட்டுறவு சங்கங்களின் தலைமை பொறுப்பை வகித்தார்.
ஒன்றிய விவசாய துறை அமைச்சராக இருந்தார். ஆனால் விவசாயிகளின் தற்கொலைகளைத் தடுக்க முடியவில்லை. ஆனால் பாஜக மட்டுமே விவசாயிகளின் தற்கொலைகளைத் தடுத்தது. சட்டமன்ற தேர்தலில் சரத் பவார் மற்றும் உத்தவ் தாக்கரே ஆகியோரின் இடத்தை மக்கள் அடையாளம் காட்டியுள்ளனர்.
அவர்கள் இருவரையும் வீட்டிற்கு அனுப்பி, பாஜகவுடன் கூட்டணி வைத்துள்ள சிவசேனா மற்றும் தேசியவாத காங்கிரஸ் கட்சியை மக்கள் வெற்றிபெறச் செய்தனர். கூட்டணியின் வெற்றிக்கு பாஜக தொண்டர்கள் உண்மையாக உழைத்தார்கள். பஞ்சாயத்து முதல் நாடாளுமன்றம் வரை கட்சியின் வெற்றிக்காக பாடுபட்டனர். பாஜகவை மீண்டும் காட்டிக்கொடுக்கும் எண்ணம் இனிமேல் யாருக்கும் வராது. வாக்குச்சாவடி அளவில் கட்சியை வலுப்படுத்த பாஜக தொண்டர்கள் கவனம் செலுத்த வேண்டும்’ என்றார்.
The post சட்டமன்ற தேர்தல் முடிவின் மூலம் காட்டிக்கொடுக்கும் அரசியலுக்கு முற்றுப்புள்ளி: சரத்பவார், உத்தவ் மீது அமித் ஷா காட்டம் appeared first on Dinakaran.