புதுடெல்லி: சட்டவிரோத மதமாற்றப்புகாரில் சிக்கிய சங்கூர் பாபாவுக்கு வெளிநாடுகளில் இருந்து ரூ.60 கோடி நிதி வந்துள்ளது தெரிய வந்துள்ளதாக அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது. உத்தரபிரதேச மாநிலம் பால்ராம்பூர் பகுதியை சேர்ந்தவர் சங்கூர் பாபா என்கிற ஜலாலுதீன் என்கிற கரியமுல்லா ஷா. இவர் மீது சட்டவிரோத மத மாற்றம் செய்ததாக உபி அரசு வழக்கு பதிவு செய்தது. மேலும் பண மோசடி வழக்கு உள்ளிட்ட வழக்குகளை அவர் மீதும், அவரது மகன் மெஹபூப், நண்பர்கள் நவீன் ரோஹ்ரா என்கிற ஜமாலுதீன், நஸ்ரீன் என்கிற நீது ஆகியோர் மீது தொடரப்பட்டது. இவர்களை உபி பயங்கரவாத தடுப்பு படை கைது செய்து சிறையில் அடைத்தது.
இந்த நிலையில் சங்கூர் பாபா தொடர்புடைய இடங்களில் அமலாக்கத்துறை சோதனை நடத்தியது. இதை தொடர்ந்து சங்கூர் பாபா, வெளிநாட்டிலிருந்து 22 வங்கிக் கணக்குகளில் ரூ.60 கோடி பெற்றிருப்பதைக் கண்டறிந்துள்ளதாக அமலாக்க இயக்குநரகம் தெரிவித்துள்ளது. சங்கூர் பாபாவும் அவரது கூட்டாளிகளும் பல்ராம்பூரில் உள்ள சந்த் அவுலியா தர்காவின் வளாகத்தில் இருந்து செயல்படும் ஒரு அமைப்பை ஏற்படுத்தி, அங்கு இந்திய மற்றும் வெளிநாட்டு பிரஜைகள் இருவரும் கலந்து கொள்ளும் பெரிய கூட்டங்களை நடத்தி வந்ததாகவும் இதன் மூலம் வெளிநாடுகளில் இருந்து பணம் பெற்று அதை அசையா சொத்துகளாக வாங்கி குவித்ததாகவும் அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது. இதற்கிடையே சங்கூர் பாபா கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து, பல்ராம்பூரில் அவருடன் தொடர்புடையதாகக் கூறப்படும் சட்டவிரோத கட்டுமானங்களை உபி அரசு இடித்து தள்ளியது.
The post சட்டவிரோத மதமாற்ற புகார்; சங்கூர் பாபாவுக்கு ரூ.60 கோடி வெளிநாட்டு நிதி கண்டுபிடிப்பு: அமலாக்கத்துறை தகவல் appeared first on Dinakaran.