சண்டிகர் : பாகிஸ்தான் குறிவைக்கும் சில நகரங்களில் சண்டிகர் மிக முக்கியமானதாக இருக்கிறது. இதை கருத்தில் கொண்டு, சண்டிகர் நகர மக்கள் உஷார் படுத்தப்பட்டுள்ளனர். சண்டிகரில் ஏர் சைரன்கள் மூலம் ஒலி எழுப்பப்பட்டு மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் என பொதுமக்கள் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர். மேலும், சண்டிகரில் மருந்து கடைகளைத் தவிர மற்ற அனைத்து கடைகளையும் இன்று இரவு 7 மணிக்குள் மூட உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
வான்வழித் தாக்குதல் நடத்தப்படலாம் என்ற எச்சரிக்கையைத் தொடர்ந்து, இன்று (மே 9) காலை 9:30 மணியளவில் சண்டிகரில் வான்வழித் தாக்குதல் சைரன்கள் ஒலிக்கப்பட்டன. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நகரம் முழுவதும் சைரன்கள் ஒலிக்கப்பட்டதாகவும், அனைவரும் வீட்டுக்குள்ளேயே இருக்கவும், பால்கனிகளில் இருந்து விலகி இருக்கவும் அறிவுறுத்தப்பட்டதாக சண்டிகர் துணை ஆணையர் வெளியிட்ட செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே வட மேற்கு எல்லையில் பதற்றமான சூழல் காரணமாக, வங்கதேச எல்லையில் உள்ள மேகாலயா மாநிலத்தில் 2 மாதங்களுக்கு இரவு நேர ஊரடங்கு பிறப்பித்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேகாலயாவின் கிழக்கு காசி ஹில்ஸ் மாவட்டத்தில் பாரதிய நாகரிக் சுரக்ஷா சன்ஹிதா (BNSS) பிரிவு 163 இன் கீழ் இரவு ஊரடங்கு உத்தரவு விதிக்கப்பட்டுள்ளது.
The post சண்டிகரில் ‘சைரன்’ எச்சரிக்கை, இரவு 7 மணிக்குள் கடைகளை மூட உத்தரவு : மேகாலயாவில் 2 மாதங்களுக்கு இரவு நேர ஊரடங்கு!! appeared first on Dinakaran.